நான் பாஜகவில் சேர்ந்துவிட்டேனா? வாட்ஸ் அப் பார்த்து தான் எனக்கே தெரியும்! கதறும் Ex MLA கருப்பசாமி!
சென்னை: பாஜகவில் தாம் சேரவில்லை என்றும் பாஜகவில் தாம் சேர்ந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன் எனவும் அவிநாசி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவினருக்கு எதற்கு இந்த வேலை என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தாம் என்றும் அதிமுககாரன் தான் எனவும் கருப்பசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இணையுமாறு தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை, ஆனால் தனக்கு அடையாளம் கொடுத்த கட்சிக்கு துரோகம் இழைக்கமாட்டேன் எனக் கூறிவிட்டேன் எனக் கூறியுள்ளார். சும்மா பேச்சுவார்த்தை நடத்தியதை வைத்து பாஜகவில் சேர்ந்துவிட்டதாக பாஜகவினர் வாட்ஸ் அப்பில் தகவல் பரப்புவது சரியல்ல எனக் கூறியுள்ளார்.

அதிமுக தலைமையிடம் தனது நிலைப்பாடு குறித்து தெரிவித்துவிட்டேன் என்றும் இருப்பினும் பாஜகவினர் பார்த்த வேலையால் தன்னை தொடர்பு கொண்டும் பேசும் பலரும், ஏன் இப்படி செய்தாய் என்று தன்னிடம் கேட்கிறார்கள் எனவும் கருப்பசாமி நொந்துகொண்டார். பாஜகவில் இணையாத தன்னை பாஜகவில் இணைந்துவிட்டதாக பொய் தகவலை பரப்புகிறார்கள் என்றும் இதனை எங்கு போய் சொல்வது என்றே தெரியவில்லை எனவும் மீண்டும் நொந்துகொண்டார் கருப்பசாமி.
பாஜகவிற்கு வருமாறு தன்னிடம் சும்மா பேசியதை வைத்து வந்துவிட்டதை போலவே இப்படி செய்திருக்கிறார்கள் என கொதிக்கிறார். கருப்பசாமியை பொறுத்தவரை கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தாம் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு ஜெயலலிதாவும், அதிமுகவும் தான் காரணம் என நன்றி மறக்காத அவர், அப்படியிருக்கும் போது அதிமுகவுக்கு எப்படி துரோகம் செய்வேன் என வினவியுள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கைத்தாங்கலாக நடக்கக் கூடிய சூழலில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வருடங்களுக்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், நோட்டாவை விட கடந்த தேர்தலில் குறைவான ஓட்டுக்களை பெற்றவர்களை பாஜகவில் இணைத்திருப்பதன் மூலம் என்ன பயன் என்பது பாஜக தலைமைக்கு தான் தெரியும்.












Click it and Unblock the Notifications