திமுகவை அப்படி பேசினாரே.. அவருக்கு பதவியா! முதல்வர் குழுவில் ராமசுப்பிரமணியன்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் கோவில்களை மேம்படுத்தவும், புனரமைக்கவும் வழி செய்யும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவில் பாஜக முன்னாள் பிரமுகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் கூட இந்து சமய அறநிலையத்துறையின் முடிவுகள் பலவற்றை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துக்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்பட்டது தொடங்கி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது வரை பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கோவில்களை மேம்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. கோவில்களின் நிலையை கண்காணிக்கவும், பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்யவும் இந்த குழு பயன்படும். இந்த குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மொத்தம் 17 பேர் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள்
இந்து மத அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகள் என்று கோவில் நிர்வாகம் தெரிந்த, இந்து சமய விதிமுறைகள், ஆகம விதிகள் தெரிந்த பலர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். சுகி சிவம், ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், கருமுத்து கண்ணன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆகியோர் இதில் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பாஜக ந ராமசுப்பிரமணியன்
மேலும் மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன் , சாந்தலிங்க மருதாசல அடிகளார், சத்தியவேல் முருகனார், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார், தேச மங்கையர்க்கரசி, ஸ்ரீமத் வராக மகாதேசிகன் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக முன்னாள் பாஜக நிர்வாகியான ந ராமசுப்பிரமணியன் முதல்வரின் இந்த குழுவில் இணைக்கப்பட்டு இருக்கிறார்.

திமுக ந ராமசுப்பிரமணியன் ஸ்டாலின்
கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜகவில் இருந்து ந ராமசுப்பிரமணியன் நீக்கப்பட்டார். அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்தும் பாஜக நிர்வாகிகள் குறித்தும் இவர் தவறுதலாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தமிழிசை சௌந்தரராஜனை விமர்சனம் செய்து ந ராமசுப்பிரமணியன் சில இடங்களில் பேட்டி அளித்தார்.

தமிழிசை ந ராமசுப்பிரமணியன்
மேலும் பாஜகவின் தேர்தல் நிலைப்பாடுகளையும் ந ராமசுப்பிரமணியன் விமர்சனம் செய்து இருந்தார். இது போக திமுகவின் தேர்தல் அறிக்கை அவர்கள் எடுத்த சில முக்கிய முடிவுகள் ஆகியவற்றை ராமசுப்பிரமணியன் ஆதரித்து தொலைக்காட்சிகளில் அவ்வப்போது பேசினார். திமுக தேர்தல் அறிக்கை பல்வேறு தொலைநோக்கு பார்வையுடன் உள்ளது. அதற்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன். திமுகதான் கண்டிப்பாக தேர்தலில் வெல்லும். திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று முதல்வராக ஸ்டாலின் அரியணையில் அமருவார் என்று பேசி இருந்தார்.

திமுக பாராட்டு ந ராமசுப்பிரமணியன்
ஒரு காலத்தில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியவர் இவர். இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக திமுக பக்கம் நகர்ந்து திமுகவிற்கு ஆதரவாக தொடர் கருத்துக்களை பேசி வந்தார். இந்த நிலையில்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவில் ராமசுப்பிரமணியன் இடம்பெற்று இருக்கிறார். கோவில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சிகளில் இவர் தொடர்ந்து பேசி வந்தார்.

ஸ்டாலின் குழு ந ராமசுப்பிரமணியன்
அதிலும் முக்கியமாக அறநிலையத்துறை செயல்பாடுகளை சில இடங்களை ராமசுப்பிரமணியன் பாராட்டியும் வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் குழுவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் திமுக தொண்டர்கள் சிலருக்கு இந்த முடிவு அதிருப்தியை கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தவர் ராமசுப்பிரமணியன். அவருக்கு இந்த பதவி கொடுத்திருக்க கூடாது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications