ஜெயலலிதா ஆட்சியில் அடங்கியிருந்த ரவுடிகள் இப்போது வெளியே வந்து விட்டார்கள்.. ஆவேசமான டிடிவி தினகரன்
சென்னை: திமுக கட்சிக் கொடியை கட்டிக் கொண்டு சமூக விரோதிகள் நடமாடுகிறார்கள், உடல் நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தலைமை கழக அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனாவுக்குப் பிறகு எந்த அரசியல் வேலைகளிலும் ஈடுபடாத டிடிவி தினகரன் இன்று கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்திவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார் டிடிவி தினகரன்.

மேகதாட்டு அணை
டிடிவி தினகரன் பேசுகையில், ''கர்நாடக அரசு மேகதாட்டு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ளது. மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்து வரும் மார்ச் 14 ம் தேதி கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

கொரோனா
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். முதற்கட்டமாக வரும் 18ம் தேதி முதல், கட்சி பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களும் சூறாவளி சுற்று பயணம் செய்யவுள்ளேன்.

திமுக
திமுகவுக்கு வாக்களிக்க கூடாது என மக்கள் முடிவெடுப்பார்கள். ஈழ அரசியல், சமூக நீதியை பற்றி பேசும் திமுக அது எதையும் கடைபிடிப்பதில்லை. சமூக விரோதிகள் திமுக கொடியை கட்டிக்கொண்டு வெளியில் சுற்றுகின்றனர். எதிர்கட்சியாக இருக்கும் போதே பிரியாணி கடையை உடைத்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

ரவுடிகள்
அம்மா எனும் ஆளுமையால் எல்லா ரவுடிகளும் அடங்கி இருந்தனர். இப்போது எல்லா ரவுடிகளும் வெளியே வந்துவிட்டனர். இந்த சூழலில் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை, விரைவில் இது எல்லாவற்றுக்கும் தீர்வு வரும். உக்ரைனில் போர் நடந்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு முறையாக செயல்படுகிறது.

ஜெ மரணம்
எங்கள் கட்சியில் உள்ள அத்தனைப்பேருக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதுதான் உண்மை. அரசியல் ரீதியாக தேவையில்லாமல் எங்கள் சித்தி மீது பழியைப்போட்டு எதோ பண்ணிப்பார்த்தார்கள். ஆனால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது'' என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications