ஓபிஎஸ் முகத்தை பார்க்க மறுத்த மோடி.. கைவிரித்த அமித் ஷா.. அரவணைத்த ஸ்டாலின்.. எதிரிக்கு எதிரி நண்பன்
சென்னை: "நான் என்ன பாவம் செய்தேன்?" என்று சில நாட்களுக்கு முன்புதான் தேனியில் உருகினார் பன்னீர். இன்று அறிவாலயத்தில் உதயசூரியன் வெளிச்சத்தில் ஐக்கியமாக உள்ளார். தமிழக அரசியலில் 'கிங் மேக்கராக' இருக்க ஆசைப்பட்ட ஓபிஎஸ், இன்று 'கிங்' ஸ்டாலினிடம் தஞ்சம் புகுந்ததுதான் தற்போதைய ஹாட் டாபிக்!

டெல்லி கொடுத்த 'நோ'.. எடப்பாடி வைத்த 'செக்'!
கடந்த சில மாதங்களாகவே பன்னீரின் ஜாதகம் சரியில்லை போல.
மோடி - அமித்ஷா கொடுத்த அதிர்ச்சி: கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரைச் சந்திக்க பன்னீர் தரப்பு எவ்வளவோ மல்லுக்கட்டியது. ஆனால், "டைம் இல்லை" என்று டெல்லி கைவிரித்துவிட்டது. அதே நேரத்தில் எடப்பாடிக்கு (EPS) சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றதுதான் பன்னீரை ரொம்பவே நோகடித்திருக்கிறது.
அமித்ஷா சொன்ன 'அந்த' ரகசியம்: கடந்த சில வாரங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவைச் சந்தித்தபோது, "திமுக கூட்டணி பலமாக இருக்கிறது, நீங்கள் சிதறிக் கிடந்தால் ஜெயிக்க முடியாது" என்று அவர் ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம். எடப்பாடியோ, "யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வேன், ஆனால் ஓபிஎஸ்-ஸை மட்டும் உள்ளே விடமாட்டேன்" என்று அடம் பிடிக்க, வேறு வழியே இல்லாமல் அறிவாலயப் பக்கம் ஒதுங்கிவிட்டார் பன்னீர்.
'மடத்துக்குப் போகவா?' - பன்னீரின் 'பஞ்ச்' டயலாக்!
ஜெயலலிதா பிறந்தநாளன்று, "நான் என்ன தவறு செய்தேன்? அரசியலை விட்டுவிட்டு சங்கர மடத்துக்கா போகச் சொல்கிறீர்கள்?" என்று ஆவேசப்பட்டார். ஆனால், இப்போது 'மடத்துக்கு' பதில் 'அண்ணா அறிவாலயத்தை'த் தேர்ந்தெடுத்திருக்கிறார். கூடவே இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் என ஒவ்வொரு விக்கெட்டாக ஏற்கனவே திமுக பக்கம் விழுந்தபோதே, பன்னீரின் இந்த 'மூவ்' எதிர்பார்க்கப்பட்டதுதான்.
தேனி யாருக்கு? - சீட் பாலிடிக்ஸ்!
அடுத்த இரண்டு மாதத்தில் தேர்தல். பன்னீருக்கு போடிநாயக்கனூர் தொகுதி கிடைக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. "அவர் வந்தால் வரட்டும், ஆனால் அவருக்கு ஏன் சீட் கொடுக்க வேண்டும்?" என்று திமுக-வின் தென் மாவட்ட உடன்பிறப்புகள் இப்போதே முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும், எடப்பாடியை வீழ்த்த பன்னீர் ஒரு 'அஸ்திரமாக' இருப்பார் என்பது அறிவாலயத் தலைமை போடும் கணக்கு.
அதிமுகவை பிடிக்க தர்மயுத்தம் நடத்தியவர், ஜெயலலிதாவின் லெப்ட் ஹேண்ட் இப்போது திமுகவிற்கு புறப்பட்டுவிட்டார். எடப்பாடிக்கு எதிராக 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கணக்கை ஸ்டாலின் சரியாகப் போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்! வீழ்ந்தது எடப்பாடியா.. ஓபிஎஸ்ஸா என்று கேட்டால்.. வென்றது ஸ்டாலின் என்று சொல்லலாம்!












Click it and Unblock the Notifications