கேப்பே விடாத விஜய்..மொத்தமாக உளறிய அரசக்குமார்.. கைதாகும் முன்னாள் திமுக அமைச்சர்?
சென்னை: கல்வித் துறையை உலுக்கியுள்ள ₹100 கோடி நிதி மோசடி வழக்கில், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களும் பரபரப்பு தகவல்களும் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்த குற்றச்சாட்டில், அதன் தலைவர் பி.டி. அரசகுமார் சமீபத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ள நிலையில், சென்னை காவல்துறையின் தீவிர விசாரணையின்போது வெளிவந்துள்ள புதிய தகவல்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
விசாரணையில் உடைந்த அரசகுமார்: சிக்கிய ரூ.200 கோடி பரிவர்த்தனை
கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் மத்திய குற்றப்பிரிவு சிறப்புப் படை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையின்போது, அவர் சேகரித்த லஞ்சப் பணம் எங்கு சென்றது, யாருக்கெல்லாம் கைமாறியது என்பது குறித்த பல திடுக்கிடும் ஆவணங்களும் கணக்கு விவரங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தர உயர்வு, மற்றும் DTCP/CMDA சான்றிதழ்கள் போன்ற சட்டப்பூர்வ அனுமதிகளை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக, முந்தைய திமுக ஆட்சியின் போது செல்வாக்குடன் திகழ்ந்த ஒரு முன்னாள் அமைச்சருக்கும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபருக்கும் இடையே பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வட்டாரங்களின்படி, இந்த மோசடியில் அரசகுமார் மூலம் மட்டும் சுமார் ₹200 கோடிக்கும் அதிகமான தொகை, அந்த முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நிழல் நிறுவனங்களின் மூலமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் போலீஸாரின் கைகளில் கிடைத்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சருக்கு விரைவில் சம்மன்?
தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பெருந்தொகை, அரச அதிகாரிகளையும் அரசியல் பிரமுகர்களையும் திருப்திப்படுத்தவேப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த நிதிப் பரிவர்த்தனைகளில் நேரடியாகத் தொடர்புடைய அந்த முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் இருவரையும் விரைவில் நேரில் அழைத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
தேவைப்பட்டால், வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவியையும் நாடி, இந்த ₹200 கோடி பணப் பரிவர்த்தனைகளின் மூலத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் குறித்து தற்போதைய அரசு பல்வேறு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள சூழலில், இந்தத் தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கிலும் முன்னாள் திமுக அமைச்சரின் பெயர் அடிபடுவது எதிர்க்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சான்றிதழ்களைக் காட்டி தனியார் பள்ளிகளை மிரட்டியும், ஆசை காட்டியும் வசூலிக்கப்பட்ட இந்த கோடிக்கணக்கான பணம், யார் யாருக்குச் சென்று சேர்ந்தது என்பதை முழுமையாக வெளிக்கொண்டு வர காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அடுத்த சில நாட்களில் இந்த வழக்கில் மேலும் பல முக்கியக் கைதுகளும், சம்மன்களும் பிறப்பிக்கப்படலாம் என்பதால் தமிழக அரசியல் களம் மேலும் சூட பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications
