“போனமுறை ஆளுநர் ஏன் போட்டார்? இப்போ ஏன் போடவில்லை?”- ஆன்லைன் விவகாரம் பற்றி சந்துரு சரமாரி கேள்விகள்
சென்னை: ஆளுநருக்கும் திமுக அரசுக்குமான யுத்தம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் மசோதாவைத் தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஒன்றிய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை அவர் அடுக்கடுக்காக எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு என்ன சொல்கிறார்? ஆளுநர் சொல்வதைப் போல மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா? சட்டம் என்ன சொல்கிறது? என்ற பல கேள்விகளை முன்வைத்த போது அவர் மிகத் தெளிவான விளக்கங்களை அளித்தார்.
"முதல்முறையாக இது அனுப்பப்பட்டிருந்தால் ஏதோ தெரியாமல் தவறு நடந்துவிட்டதாகச் சொல்லலாம். தொடர்ந்து ஆளுநர் இப்படிச் செய்வது ஒரு தவறான அணுகுமுறையாகத்தான் நான் பார்க்கிறேன். முன்னதாகவே தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிடக் கிட்டத்தட்ட 20 மசோதாக்கள் அவரிடம் உள்ளன.
இப்படித்தான் நீட் மசோதாவைத் திரும்ப அனுப்பினார். அது இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்குத்தொடுத்துள்ளது.

இதில் ஏதோ நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது" என்று கூறும் முன்னாள் நீதிபதி சந்துரு, ஆளுநர் மக்கள் நலம் சார்ந்து யோசிக்காமல், எப்படித் தாமதப்படுத்துவது என யோசித்துச் செயல்படுவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது எனச் சொல்கிறார். மேலும், "இந்த ஆலோசனையை ஆளுநர் சொல்வதற்கு 4 மாதங்களை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரே வாரத்தில் அதைச் செய்திருக்கலாம்.
ஆக, வேண்டும் என்றே ஒரு முக்கியமான மசோதாவைத் தடுத்து வைத்துள்ளார்கள். இந்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய சந்துரு, " இதற்கு முன்னதாக இந்த மசோதாவில் உள்ள அதே சரத்துகளை வைத்து அவசரச் சட்டத்தை அவர்தான் பிறப்பித்தார். அதில் கையெழுத்துப் போட்ட ஆளுநர், இப்போது இதில் ஏன் கையெழுத்துப் போடவில்லை என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
ஒருமுறை உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவில் கையெழுத்துப் போட்டுள்ளார் எனும்போது திரும்ப அதே மசோதாவை ஷரத்து மாற்றாமல்தான் தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது. அதைமட்டும் ஏற்கமாட்டேன் என்பது என்ன விதியில் பொருந்தும் என்று புரியவில்லை.
உயர்வான ஒரு பொறுப்பை வகிக்கும் போது அதில் பொறுப்பான அணுகுமுறை இருக்கவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் ஆளுநர் பொறுப்பாக நடந்து கொண்டதைப் போலத் தெரியவில்லை.

அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்ட ஆளுநர், ஏன் அதே மசோதாவில் இப்போது கையெழுத்து இடவில்லை என்பதை அவர்தான் விளக்கவேண்டும். ஒருவேளை அவர் தவறாகச் செய்துவிட்டார் எனில், அந்த வார்த்தையை அவர் மசோதாவை ஏற்க மறுக்கும் போது எழுத்தில் கூறவேண்டும். ஆனால், அப்படியான ஒரு வார்த்தை எங்குமே இல்லை.
கடந்த 4 மாதக் காலமாக உட்கார்ந்து யோசித்தேன். தவறு என இப்போது உணர்கிறேன். ஆகவே அதில் கையெழுத்துப் போட்டிருக்கக் கூடாது என அவர் சொல்லவேண்டுமா? இல்லையா?
உதாரணமாக ஆளுநர் தனது மறுப்பில், 'ஏற்கெனவே மூன்று நீதிமன்றங்கள் இந்த மசோதாவைச் செல்லாது என்று கூறியுள்ளது' என்கிறார். அது சூதாட்டத் தனிச்சட்டத்திற்குத்தான்.
நாங்கள் இதைச் சூதாட்டத் தனிச்சட்டமாகப் பார்க்கவில்லை. இதை ஒரு கிரிமல் குற்றமாகப் பார்க்கிறோம். ஒரு ஏமாற்று மோசடியாகப் பார்க்கிறோம். ஒரு மோசடி சார்ந்த விஷயங்களில் சட்டம் இயற்றக் கூடிய அதிகாரம் மாநில அரசுக்குத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆளுநர் அதற்கு மாநில அரசுக்கு அதிகாரமே இல்லை என்கிறார். ஒரு சட்டமன்றத்திற்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை நிர்ணயிக்கக் கூடியது உயர்நீதிமன்றம்தான். அதற்குப் பின் உச்சநீதிமன்றம். ஆனால் ஆளுநர் அல்ல.
ஒரு சட்டம் அடிப்படை உரிமைக்கு எதிரானதாக உள்ளது என்றால், 13 பிரிவைக் கொண்டு நீதிமன்றம் அதை ரத்து முடியும். சூதாட்டம் விளையாடுவது என்பது அடிப்படை உரிமை கிடையாது. ஒரு தொழிலை நடத்தச் சட்டத்தில் இடம் உள்ளது.
ஒரு மோசமான சூதாட்டத் தொழிலை நடத்தச் சட்டத்தில் இடமில்லை. ஒரு சூதாட்டத் தடைச் சட்டத்தைத் தடுப்பதன் மூலம், மிகப்பெரிய சூதாட்டத்தில் ஆளுநர் ஈடுபட்டுவருகிறார் என்று நான் சொல்கிறேன்" என்றவரிடம் ஒன்றிய அரசுக்குத்தான் இதைச் சட்டமாக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்றோம்.
அதற்கு அவர், "எங்களது கமிட்டியிலேயே என்ன சொல்லி இருக்கிறோம் தெரியுமா? ஒரு மாநில அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யும்போது, தடைவிதிக்காத மற்றொரு மாநிலத்தின் எல்லையிலிருந்து இந்த ஆட்டத்தை ஆட வாய்ப்பு இருக்கிறது.

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் முறையிட்டு சட்டம் இயற்ற வைக்கலாம். அதற்குச் சட்டத்தில் இடமுள்ளது. ஆகவே நம் மாநில அரசு அதற்கும் முயற்சி செய்யவேண்டும் எனக் கூறியுள்ளோம். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுபவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் சொல்கிறார்கள் என்றே நான் சொல்வேன்.
நாங்கள் ஆன்லைன் ரம்மி தொடர்பாக விசாரணை நடத்தியபோதுகூட, சில ஆன்லைன் நிறுவனங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்கிறோம் என்று முறையிட்டார்கள். நாங்கள் சொன்னேன், 'சூதாட்டம் நடத்தும் கம்பெனிக்கு இது பற்றிச் சொல்ல என்ன நியாயம் இருக்கப் போகிறது? நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை' என்றோம்.
எங்களிடம் போதுமான தரவுகள் உள்ளன. ஆகவே நாங்கள் செயல்படுத்தப் போகிறோம். என்றோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின், எங்கள் விசாரணைக்குப் பின்பு பொதுமக்கள் கருத்தையும் வேறு தரப்புக் கருத்துகளையும் கேட்ட பின்பே முடிவு எடுத்து அவசரச் சட்டம் பிறப்பித்தார்.
ஆகவே ஆளுநர் ரவியின் காலதாமதம் சந்தேகத்தை அளிக்கிறது. இவர் மட்டுமல்ல; தமிழிசை செளந்தரராஜன், பன்வாரிலால் புரோகித், ஆரிப் முகமது கான் என இந்த மூன்று ஆளுநர்களும் மாநில அரசை இயங்கவிடாமல் தடுக்க முயன்று வருகிறார்கள்.
ஷரத்து 200 சட்டவிதி என்ன சொல்கிறது என்றால், ஆளுநர்களின் ஒப்புதல் சட்ட நிபுணர் என்ற அடிப்படையில் இல்லை. ஒரு மாநிலத்தின் தலைப்பைப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதற்காகவே பெறப்படுகிறது. அதைத் தெளிவாக இவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
எனவே இவர்கள் போடும் முட்டுக்கட்டைக்குப் பின்னால் ஒன்றிய பாஜக அரசு உள்ளது. அவர்கள் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலங்களில் ஒரு ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அப்படித்தான் இந்த விவகாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது" என்கிறார்
இதனிடையே ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறும் நிலையில் அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications