பால் பண்ணை..! நாராயண ராவ், ஜனா கிருஷ்ணமூர்த்தி வரிசையில் சேரும் மாஜி பாஜக தலைவர் அண்ணாமலை?
சென்னை: தமிழகத்தில் ஒரு காலத்தில் ஆளுமை செலுத்திய சில பாஜக முன்னாள் தலைவர்கள், இப்போது அரசியல் களத்தில் இருந்து விலகி, புதிய தொழில் முயற்சிகளிலும், சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பல தசாப்தங்களாக அரசியலில் அனுபவம் பெற்ற இந்தத் தலைவர்கள், படிப்படியாக தங்கள் பாதையை மாற்றி, தொழில், கல்வி, இயற்கை விவசாயம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற துறைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர்.

கே. நாராயண ராவ்
தமிழக பாஜகவின் அடித்தளத்தை அமைத்தவர்களில் முக்கியமானவர் கே. நாராயண ராவ். இவர் 1929-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார். பள்ளிப் பருவத்தில் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் ஈடுபட்டவர். தனது கல்லூரி வாழ்க்கை தொடங்கும் போதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் முழுநேர சேவகராக 8 ஆண்டுகள் பணியாற்றியவர். ஜனசங்கம், பின்னர் பாஜக மாநில பொறுப்புகளில் முன்னிலை வகித்தவர். 1980-ல் தமிழக பாஜக நகர பிரிவின் முதல் மாநில தலைவர் பொறுப்பில் இருந்தார்.
1958-ம் ஆண்டிலிருந்து "கலாநிகேதன்" என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தெலுங்குத் திரைப்படங்களை தயாரித்து வந்தார். கல்வியின் மீதும் சமூக சேவையின் மீதும் அவருக்கு இருந்த ஆர்வம், தமிழக பாஜகவின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. நாராயண ராவ்-தான் தமிழக பாஜகவின் முதல் தலைவராகும். 1980-84 காலகட்டத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்தார். பிறகு தொழில்துறையில் மூழ்கினார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி
தேசிய அளவில் பாஜகவின் தேசியத் தலைவராகப் பணியாற்றிய மதுரைக்கார தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி (1928-2007). சட்டக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர், 1965-ல் வழக்கறிஞர் தொழிலை விட்டு அரசியலில் இறங்கினார். அவசரநிலையின் போது போராட்டங்களில் பங்கேற்று முக்கியப் பங்காற்றினார். பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராகப் பணியாற்றிய பிறகு, 2001-ல் பாஜகவின் தேசியத் தலைவராகவும் உயர்ந்தார். மார்ச் 14, 2001 அன்று, அவர் பாஜகவின் தலைவரானார் மற்றும் ஜூன் 30, 2002 வரை அந்தப் பதவியில் தொடர்ந்தார். அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு, அவர் தனிப்பட்ட முறையில் சட்ட ஆலோசகராகவும், சட்ட ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
அண்ணாமலை
இதன் பிறகு பல தலைவர்கள் வந்திருந்தாலும், அவர்கள் அரசியலிலேயே இருக்கிறார்கள். மோடி அரசு வந்த பிறகு உரிய பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். இந்த நிலையில்தான், பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை, பால் தொழில் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இவரும் நாராயண ராவ் மற்றும் ஜனா கிருஷ்ணமூர்த்தி வழியில் சேரப்போகிறாரா, அல்லது, பாஜக இவரை அரசியலுக்கு பயன்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications