மேகதாது நடுவர்மன்றம்.. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கைக்கு உடனே ஓகே சொன்ன விஜய்.. சட்டசபையில் செம
சென்னை: மேகதாது அணி கட்டக் கூடாது என்று முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனி நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கூறிய முதல்வர் விஜய், தனி நடுவர் மன்றம் அமைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், காவிரி விவகாரத்தில் நீண்ட அரசியல், சட்டப் போராட்டம் நடத்திதான் நமது உரிமையை பெற்றுள்ளோம். நமது உரிமை நிலைநாட்டப்பட்டது திமுக அரசினாலேயே என்பதை இங்குள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள்.

எங்களுடைய கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகவில் ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் மேகதாது அணை கட்டும் திட்டத்தில், அப்போதைய முதல்வராக இருந்த ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அணை திட்டத்திற்காக ரூ.1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதைக் கண்டித்து, இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு.
திமுக அரசின் தொடர் முயற்சியால் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை, நீர்வள அமைச்சகத்தில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டது. திமுக அரசு இருந்தவரை விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை.
அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாகப் பேசி, நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தனித் தீர்மானத்தை பிரதமரிடம் சென்று வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதை தடுக்க சட்ட ரீதியாகவும், பிரதமர் மூலமும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு திமுக துணையாக இருக்கும்.
நாம் ஒற்றுமையாக இருந்து கர்நாடகா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவோம். அதேபோல் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலுரை வழங்கிய விஜய், மேகதாது பிரச்சனைக்காக எனது தலைமையில் 26.05.2026 அன்று பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன் வைத்த கருத்தை தீர்மானத்தின் 4வது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என்று கேட்டுக் கொண்டார். இதன்பின் திருத்தப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த தீர்மானம் நிறைவேற ஆதரவளித்த அனைத்து கட்சிகளின் எம்எல்ஏ-க்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications