போடு தகிட தகிட..2026ல் மோதும் நான்கு யானைகள்! இப்போதே பரபரப்பான தமிழக அரசியல் களம்.. யார் யாருடன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தற்போதைய தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி இருக்கும் நிலையில் தற்போதைய சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகும் சூழல் இருக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு கட்சிகள் தலைமையில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒருமுறை தவறு செய்து விட்டேன்.. இனி அந்த கட்சியுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என கூறியிருந்தார்.

அவர் இருந்தவரை தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி அமையவே இல்லை. அதற்குப் பிறகு அதாவது ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி உருவாகியது. தொடர்ந்து தலைமையிலும் கட்சி விவகாரங்களிலும் ஆட்சியிலும் பாஜகவின் தலையீடு இருப்பதாகவே கூறப்பட்டது.

DMK AIADMK TVK

அதிமுக - பாஜக:

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக 2021 ஆம் ஆண்டு அண்ணாமலை பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் விழ தொடங்கியது. ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் அந்த கட்சி நிர்வாகிகளை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் எதிர்வினையாற்றினர். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு அந்தக் கூட்டணி உடைந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 600 நாட்கள் அந்த கூட்டணி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த கூட்டணி உருவாகி இருக்கிறது.

அமித் ஷா:

தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா எடப்பாடி பழனிச்சாமியை பிரபல நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசியதோடு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பாஜக கூட்டணி உருவானது என உறுதி செய்து இருக்கிறார். இதன் மூலம் இரண்டாவது முறையாக பாஜகவுடன் சேர்ந்து அதிமுக சட்டமன்ற தேர்தலில் சந்திக்கிறது. இதனால் அரசியல் களம் தற்போது இருந்து சூடு பிடித்திருக்கிறது.

திமுக:

ஏற்கனவே திமுக கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக தமிழகத்தில் இருக்கிறது. அந்த கூட்டணி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான். குறிப்பாக 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத் தேர்தல்கள், 2024 மக்களவை தேர்தல் என திமுக கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக இருக்கிறது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம், மதிமுக, மமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி:

இந்த நிலையில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் உறுதிப்பட சொல்லி உள்ளார். இதனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சில கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜான்பாண்டியன் கட்சி, பாரிவேந்தரின் கட்சி, கிருஷ்ணசாமியின் கட்சியாகி ஆகியவையும் பாஜக அதிமுக கூட்டணியில் மாறி மாறி பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சிகள் தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான்:

இந்த இரு பெரும் கூட்டணிகள் தவிர்த்து தமிழகத்தின் மேலும் இரு அணிகள் உருவாகும் இடம் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட காலமாக தமிழக அரசியல் களத்தில் தனித்து களமாடி வரும் சீமான் இந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. சீமான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கூறி வந்தாலும் இதுவரை அவர் தொடர்பாக பேசவில்லை. மேலும் தனித்தே இந்த தேர்தலையும் சீமான் சந்திப்பார் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் சில தொகுதிகளுக்கு தற்போதைய வேட்பாளர்களை சீமான் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி:

மாநில கட்சி என்று அங்கீகாரத்துடன் முதல்முறையாக சீமான் சட்டமன்ற தேர்தலில் சந்திக்க இருக்கிறார். இதனால் இந்த தேர்தலில் தனக்கான வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் சீமானுக்கு இருக்கிறது. ஒரு சில தொகுதிகளாக வென்று விட வேண்டும் எனவும் நாம் தமிழர் தம்பிகள் முயன்று வருகின்றனர்.

விஜய் கட்சி:

'அடுத்ததாக நான்காவது அணி என்றால் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தான். முதன் முறையாக அந்த கட்சி நேரடியாக தேர்தலில் சந்திக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்சியினர் விஜய் கொடி படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சுயேட்சையாக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது விஜய் தரப்பில் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்தவர் தற்போது நிர்வாகிகள் நியமனத்தில் படு பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து மண்டல மாநாடு, மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் மக்களை சந்திப்பது, தொகுதி வாரியாக சுற்று பயணம் என விஜய் அடுத்தடுத்து அதிரடி காட்டி இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்:

2026 தேர்தல்:

திமுக பாஜக அரசுகளை விமர்சித்து வருவதன் மூலம் கூட்டணி சேராமல் விஜய் தனித்தே களமாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்குவது தான் விஜயின் திட்டம். இந்த தேர்தலில் பெரும் வாக்கு சதவீதத்தை வைத்து வரும் தேர்தல்களில் கூட்டணி உள்ளிட்டவற்றை அமைத்துக் கொள்ளலாம் என விஜய் தரப்பு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. எனவே தற்போதைய சூழலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி தான் உருவாக இருக்கிறது. 2026 தேர்தலிலும் இதுவே தொடரும் என எதிர்பார்க்கலாம் .அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி 2026 தேர்தலில் நிச்சயம் இருக்கும் என்கிறனர் அரசியல் நிபுணர்கள்.

அதிமுக - திமுக:

இப்படியாக நான்கு முனை போட்டியால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கும். அதே நேரத்தில் கடைசி நேரத்தில் சில கூட்டணி மாறுதல்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தலைமையில் பிற கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கலாம் அல்லது விஜய்யும் நாம் தமிழர் கட்சியும் சேர்ந்து கூட போட்டியிடலாம். காரணம், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. எது எப்படி எனினும் அதிமுக - திமுக கூட்டணி தான் தேர்தலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மட்டும் மறுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+