விஜய்யின் இலவச பஸ் பயண திட்டம்.. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களிலும் சலுகை கேட்கும் மாற்றுத்திறனாளிகள்
சென்னை: வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது... தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாற்றுத்திறனாளி மாணவர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 69 சதவிகித பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், வெற்றிப் பயணத் திட்டத்தை கடந்த 2-ம் தேதி சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

தனியார் பேருந்து உரிமையாளர்
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்தத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து தொழிலை கைவிடும் நிலை ஏற்படும் என்றும், பெண்களிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது சம உரிமையை மீறும் செயல் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், வெற்றிப் பயணத் திட்டத்துக்காக அரசு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவிடும் நிலையில், தனியார் பேருந்துகளுக்கும் இழப்பீடு வழங்கி இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.
வெற்றிப் பயணத் திட்டம்
ஆனால், ஈரோட்டில் 2 வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் ஒருவர், தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் அதை நேற்றைய தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம்
"தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெற்றிப் பயணம் திட்டத்தில், சமூகத்தின் விளிம்பு நிலையினரின் ஒரு பிரிவான மாற்றுத்திறனாளிகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட பயணங்களுக்காக அரசு பேருந்துகளையே நம்பி வாழும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் இச்செயலுக்கு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறது.
பார்வையற்ற & மாற்றுத் திறனாளிகள்
கடந்த கால அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் துயரங்களை உணர்ந்து அவர்களின் பேருந்துப் பயண சலுகைகளை தொடர்ந்து வழங்கி வந்தன. சமூக நீதி மற்றும் சமத்துவத்தை பேசும் எத்தகைய திட்டமானாலும், அதில் முதன்மையாக இடம்பெற வேண்டியவர்கள் மாற்றுத்திறனாளிகள்தான். ஆனால், ஒட்டுமொத்த போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இரண்டாம் தரத்தில் கூட நடத்தாமல் முற்றிலும் புறக்கணித்திருப்பது எவ்வகையில் நியாயம்?
வெற்றிப் பயணம் திட்டத்திற்கான அரசாணையில் உடனடியாக திருத்தம் செய்து, பார்வையற்ற மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணத்தை நீட்டிக்க வேண்டும்.
எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் சலுகை
மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இலவச பேருந்துப் பயண அட்டை நடைமுறைகளை எளிமைப்படுத்தி தடையின்றி வழங்க வேண்டும். அரசு இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு, மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்டும் வகையில் உரிய திருத்த ஆணை வெளியிட வேண்டும். இல்லையெனில், அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களையும் திரட்டி ஜனநாயக முறையில் மாபெரும் கண்டன போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications
