இலவச மின்சாரம்.. களத்தில் இறங்கிய ஆபீசர்ஸ்.. விவசாய பயன்பாட்டில் இல்லாத 'கனெக்ஷன்ஸ்' கணக்கெடுப்பு?
சென்னை: இலவச மின்சாரத்திற்கு வேளாண் துறை சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலுத்துகிறது.. ஆனால், ஒருசிலர் இதனை முறைகேடாக பயன்படுத்தி வருவதால், இலவச மின் இணைப்புகளின் உண்மைத் தன்மை அறியும் கள ஆய்வு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
2023 -24ம் நிதியாண்டில் கூடுதலாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருந்தார்.. அந்தவகையில், தற்போது 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின்சார இணைப்புகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது.

அரசு மானியம்: விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது.விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாகவே வழங்குகிறது.
இப்போதைக்கு 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு இணைப்புக்கு வருடத்துக்கு 30,000 ரூபாய் செலவாகிறது... விவசாய இலவச மின்சாரத்தால், வேளாண் துறைக்கு வருடத்துக்கு கிட்டத்தட்ட 7,280 கோடி ரூபாய் செலவாகிறது.. ஆனால், ஒருசிலர், விவசாய இணைப்பு பெற்று விட்டு, அந்த மின்சாரத்தை விவசாயம் அல்லாத வேறு பணிகளுக்கும் பயன்படுத்துவதாக புகார்கள் கிளம்பியவாறே உள்ளன.
விவசாயிகள்: அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து பல நுாறு ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றன.. அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை, இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிலங்களில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.
மேலும், விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட திறனுக்கு அதிகமாக கன்டென்சர்களை பயன்படுத்தி கூடுதல் மின்சாரம் உபயோகப்படுத்துகின்றனர்... சிலர் இலவச விவசாய மின் இணைப்பு என பெற்று வர்த்தகம், தொழிற்சாலை போன்றவற்றிற்கும் சட்டவிரோதமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
பயன்பாடுகள் : அதனால்தான், விவசாய மின் இணைப்பு பெற்று, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள இணைப்புகளையும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளையும் கணக்கெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு, வேளாண் துறை செயலர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த பணிகளை, மாவட்ட வாரியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்பதால், அதிகாரிகளும் இதற்கெனவே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது இந்த பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.. தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்புகளை நேரடியாக கள ஆய்வு செய்து, உண்மையிலேயே விவசாய பணிகளுக்கு மின் இணைப்பு பயன்படுகிறதா அல்லது வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா என்று அதிகாரிகள் தீவிர ஆய்வுகளில் இறங்கி உள்ளனர்.
மின் இணைப்பு: அத்துடன், மின் இணைப்பு எண், விவசாயி பெயர், சாகுபடி பயிர், பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு விபரங்களை வழங்குமாறு வேளாண் துறைக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண் உதவி இயக்குநர் தலைமையில் வேளாண் அலுவலர் , உதவி வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழு இந்த பணியை துவக்கியிருக்கிறார்கள்.. இலவச மின்சாரம் உண்மையில் விவசாயத்திற்கு பயன்படுகிறதா என்பதை கண்டறிந்து அறிக்கை தரும்படி அரசு கேட்டிருப்பதால், ஓரிரு நாட்களில் அரசிற்கு இந்த அறிக்கையை அதிகாரிகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முறைகேடுகள்: இந்த அறிக்கை முடிவின்படி, முறைகேடாக இலவசத்தை பயன்படுத்துபவர்கள் யார் யார் என்ற விவரமெல்லாம் வெளிவந்துவிடும். அத்துடன், விவசாயிகளுக்கு மட்டுமே இந்த சலுகை முழுமையாக பயன்பெறும்வகையில் அரசு வழிவகை செய்யும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications