சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..இனி பார்க்கிங் கட்டணமில்லை! கேட்டால் ’இந்த’ நம்பருக்கு போன் போடுங்க
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமில்லாமல் வாகனங்களை இன்று முதல் நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. வாகன நிறுத்த கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பொதுமக்களிடம் யாரும் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் இருந்தால், அதற்கான தொலைபேசி எண்ணையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சற்று ஏறக்குறைய இரண்டு கோடி மக்கள் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான கார்கள், பைக் போன்ற சொந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை அரசு பேருந்து, மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை என பொதுப் போக்குவரத்து இருக்கிறது. ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வசதிக்காக கார் மற்றும் பைக் ஆகிய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே கார்கள் தான்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வரை சென்னையில் சுமார் 90 லட்சம் கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 2025 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்தை கடந்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம்.
ஆனால் சென்னையை பொருத்தவரை கார் பார்க்கிங் தான் பெரிய பிரச்சனையே. பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட்களில் கார் பார்க்கிங் இருந்தாலும் சிறிய சிறிய வீடுகளில் வசிப்போர் கார்களை சாலை ஓரங்களிலும் தெருகளிலும் நிறுத்தும் நிலை தான் இருக்கிறது. இதனால் அருகில் வசிப்பவருக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் சிலர் அந்த கார்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவதும், துப்புரவு பணி, சாலை அமைக்கும் பணி போன்றவற்றின் போது கார்களால் இடையூறு ஏற்படுவதும் வாடிக்கையாக வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளை பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மெரினா, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பார்க்கிங் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு பார்வையிட வருபவர்கள் மட்டுமல்லாது அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் தங்கள் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
அங்கு கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்ததாகவும் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்தும் இடங்களில் எந்தவித கட்டணமும் இன்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்த கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் 20.07.2025-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களை எந்தவித கட்டணமும் இன்றி நிறுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக புகார்கள் இருந்தால் பெருநகர சென்னை மாநகராட்சியில் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications