விபத்தில் சிக்கிய விஜய் கார்.. சென்னை ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பும்போது அடுத்தடுத்து ஷாக்!
சென்னை: விஜய் தனி விமானம் மூலம் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார். அவரை வரவேற்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் முண்டியடித்ததால் நிலை தடுமாறிய விஜய் திடீரென கீழே விழுந்தார். பின்னர் அவரை காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். விஜய் அங்கிருந்து புறப்பட்டபோது அவரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம் விஜய் தீவிர அரசியலில் களம் இறங்கி உள்ள நிலையில், 'ஜனநாயகன்' தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ளார். இதன் காரணமாக, 'ஜனநாயகன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்நிலையில், 'ஜனநாயகன்'படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியம் புக்கிட் ஜலீலில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று விட்டு நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அவரது ரசிகர்கள், தவெக தொண்டர்கள் என ஏராளமானோர் சூழ்ந்து வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளியேறும் வாயிலில் இருந்து தனது காரை நோக்கி விஜய் வரும்போது, அவரது ரசிகர்கள் அவரிடம் நெருங்கி முட்டி மோதிக்கொண்டு அங்கு சென்றனர். களேபரத்துக்கு மத்தியில் தனது காரில் ஏறுவதற்கு நடந்து வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அவரது பாதுகாவலர்கள், சென்னை விமான நிலைய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் அவரை பத்திரமாக அழைத்து வந்தனர்.
கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முட்டிமோத, தனது கார் அருகே விஜய் வரும்போது கூட்டம் இன்னும் நெருங்கி வர ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், விஜய்யும் கூட்டத்தின் நடுவே கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த அவரது பாதுகாவலர்கள் விஜய்யைத் தாங்கிப் பிடித்து அவரை காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டபோது அவரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது.
பின்னோக்கி ரிவர்ஸில் வந்த கார் ஒன்று, விஜய் இருந்த காரின் முன்பக்கத்தில் மோதியது. இதில், விஜய் இருந்த காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிறகு விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications