கொலை, கடத்தல், பாலியல் தொல்லை! குற்றத்தை தடுக்கும் போலீசே குற்றவாளியான அவலம்! ஸ்டாலினுக்கு தலைவலி
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் ஏகப்பட்ட கிரைம் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும் சில கிரைம் சம்பவங்களில் நேரடியாக போலீசாரே குற்றம்சாட்டப்பட்டு இருப்பது கடுமையான கேள்விகளை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதை தாண்டி.. சட்டத்தை வேண்டிய போலீசாரே புகார்களில் சிக்குவது, குற்றங்களை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் 1 - பூவை ஜெகன் வழக்கில் ஏடிஜிபி கைது
சென்னை அருகே சிறுவனைக் கடத்திய வழக்கில், ஏடிஜிபி ஜெயராமன் சீருடையில் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, காவல்துறையினர் ஜெகன்மூர்த்தியை விசாரிக்க சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரை உள்ளே அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானார்.
இந்த கடத்தல் வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய தமிழக கூடுதல் காவல் துறைத் தலைவர் (ஆயுதப்படை) எச்.எம். ஜெயராம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியும் சந்தேக நபராக உள்ளார். இவர் வழக்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவருக்கு உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. அதேபோல் உச்ச நீதிமன்ற விசாரணையில் ஜெயராம் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். ஆனால் இருவரும் வழக்கில் வரும் நாட்களில் விசாரணை செய்யப்படுவார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த வனராஜா, பலரிடம் உதவி கேட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் மணிகண்டனிடம் தனது கஷ்டங்களை கூறியுள்ளார். மணிகண்டன், கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை வனராஜாவுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
இந்த மகேஸ்வரிதான் பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏடிஜிபி ஜெயராமிடமும் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த காதல் திருமணம் பற்றியும்.. மகளை கடத்தி மீட்க வேண்டும் என்றும் பேசி உள்ளார். மகேஸ்வரி கூறியதன் அடிப்படையில், வனராஜாவுக்கு உதவ ஜெகன்மூர்த்தியும், ஜெயராமும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அந்த இளைஞரின் சகோதரர் TN 06 G 0606 என்ற எண் கொண்ட போலீஸ் வாகனத்தில் கடத்தப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் 2 - 5 காவலர்கள் கைது
சிவகங்கையில் அஜித்குமார் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடையstp ஐந்து காவல் ஆளிநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik SurakshaSanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்தகாலங்களை ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் 3 - 24 லாக்-அப் மரணங்கள்
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 24 லாக்-அப் மரணங்கள் நடந்ததாக உயர் நீதிமன்றமே நேரடியாக சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
சிவகங்கையில் அஜித்குமார் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு இதனால் உச்சம் பெற்றுள்ளது. பெனிக்ஸ், ஜெயராஜ் லாக் அப் மரணத்தை எதிர்த்த அதே திமுக இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
சம்பவம் 4- சிறுமி கடத்தல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு தாய் இல்லை என்றும் தந்தை, பாட்டியின் பராமரிப்பு வளர்ந்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. தந்தை தரப்பு அளித்த புகாரில், "எங்கள் மகளுக்கு மயக்க ஊசி செலுத்தி உதவி ஆய்வாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், அந்தப் புகாரை நுங்கம்பாக்கம் போலீஸார் வாங்க மறுத்துவிட்டனர். எனவே, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வெளியே நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், அந்தச் சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாருக்குள்ளான உதவி ஆய்வாளர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் 5- கர்ப்பிணி தாக்குதல்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்துள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் சிவாஜி என்பர் தங்களிடம் தகாத முறையில் நடந்ததாக கூறி புகார் அளிக்கச் சென்ற 5 மாத கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை தலைமைக் காவலர் ராமன் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியறுத்தின. மேலும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களை தாக்கிய புகாரில் காவலர் ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications