3 அமைச்சர்கள்.. அப்பறம் உதயநிதி.. பக்கா பிளானோடு குதித்த திமுக! வடக்கிலிருந்து வந்த டாப் "தலைகள்"
சென்னை: திமுக சார்பாக முக்கியமான மாணவரணி மாநாடு ஒன்று சென்னையில் தொடங்கி உள்ளது. முக்கியமான திட்டங்களுடன் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் திமுக மாணவரணி சார்பாக கல்வி சமூக நீதி கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடக்க உள்ளது.
இன்று தொடங்கிய மாநாட்டில் திக தலைவர் கி வீரமணி உரையாற்றினார். அதேபோல் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி, மா. சுப்பிரமணியம் உள்ளிட்ட 3 அமைச்சர்கள், மற்றும் பலர் இந்த நிகழ்வில் உரையாற்ற உள்ளனர்.

மாணவர்களிடம் கவனம் செலுத்த பிளான்
நாளை நிறைவு விழாவின் போது எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இதில் உரையாற்ற இருக்கிறார். நீட் தேர்வு ஏன் நீக்கப்பட வேண்டும், தேசிய அளவில் கொண்டு வரப்படும் பொதுத் தேர்வுகள் ஏன் நீக்கப்பட வேண்டும், மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து இதில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பேச உள்ளனர். தமிழ்நாடு முழுக்க திமுக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

என்ன திட்டம்
முன்னதாக திமுக கொள்கைகள் மாணவர் இடத்தில் சென்று சேரவில்லை என்ற புகார்கள் திமுகவினர் இடையே எழுந்தது. இதை முன்னிட்டே திமுக சார்பாக இந்த மிகப்பெரிய மாநாடு நடத்தப்படுகிறது. மாணவர்கள் இடையே இருக்கும் பிரச்சனைகள், கல்வியில் வலதுசாரி கருத்துக்களை கொண்டு வருவதற்கு எதிராக திமுக நிர்வாகிகள் இதில் பேச உள்ளதாக திமுக தரப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டம் பெரிதானது.

கர்நாடகா மோதல்
மாணவர்கள் இடையே மத ரீதியான பிளவுகளை இது ஏற்படுத்தியது. அதேபோல் தமிழ்நாட்டிலும் சில பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை திட்டும், தாக்க முயற்சிக்கும் வீடியோக்கள் வெளியாகின. இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று மாணவரணி மாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் ரவி
அதேபோல் ஆளுநர் ரவி கடந்த வாரம் துணை வேந்தர்களுடன் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டிற்கு இணை வேந்தரான அமைச்சர் பொன் முடிக்கு அழைப்பு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மாணவரணி மாநாட்டில் இதை பற்றி திமுக சார்பாக தலைவர்கள் எதிர்க்குரல் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. நாளை இந்த மாநாட்டில் நீட் தேர்வு பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் இதில் பேச உள்ளதால் ஆளுநருக்கு எதிராக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவ உறுப்பினர்கள்
சரியான நேரத்தில் திமுக முறையான திட்டத்தோடு இந்த மாநாட்டை நடத்துவதாக கூறப்படுகிறது. திமுக மாணவரணியில் மேலும் உறுப்பினர்களை சேர்ப்பது பற்றியும் இதில் விவாதிக்க உள்ளனர். தேசிய அளவிலான மாநாடு என்பதால், பல டெல்லி மற்றும் வடமாநில தலைவர்களும், பிரபலங்களுக்கும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா இதில் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார்.

யாரெல்லாம் பேசுவார்கள்?
கேரளாவை சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் ராஜீவ், காங்கிரஸ் உறுப்பினர் கன்னையா குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், கேரள சிபிஐ எம்பி சந்தோஷ்குமார், வங்காள போராளி கார்க சாட்டர்ஜி, எழுத்தாளர் திலீப் மண்டல், பத்திரிகையாளர் சீமா சிருஷ்டி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தத்க்கது. நீட் விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் இதன் மூலம் கவனம் ஈர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications