ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
சென்னை: கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தி முதல் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பதி டிகே சுரேஷ் வரை முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
நம் நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து இன்று 2வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
88 தொகுதிகள்: இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் இன்று 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களில் தலா 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், பீகார், அசாமில் தலா 5 தொகுதிகள், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 12 மாநிலம், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
விஐபி வேட்பாளர்கள்: இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,098 பேர் ஆண்களாகவும், 102 பேர் பெண்களாகவும், 2 பேர் 3ம் பாலினத்தவர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்தலில் முக்கிய தலைவர்கள் பலர் விஐபி வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அதன்படி விபரம் வருமாறு:
ராகுல் காந்தி: கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாடு தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆனி ராஜா போட்டியிடுகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான ராஜாவின் மனைவி ஆவார். மேலும் இந்த தொகுதியில் பாஜக சார்பில் கேரளா மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார்.
சசிதரூர் - ராஜீவ் சந்திரசேகர்: அதேபோல் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் மீண்டும் களமிறங்கி உள்ள நிலையில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களமிறங்கி உள்ளார். பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக அனில் ஆண்டனி போட்டியிடுகிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏகே அந்தோணியின் மகன் ஆவார்.
கேசி வேணுகோபால் - சுரேஷ் கோபி: ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜகவின் மாநில துணை தலைவர் சேபா சுரேந்திரன் களமிறங்கி உள்ளார். மேலும் ஆட்டிங்கால் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி முரளிதரன் போட்டியிட்டுள்ளார். அதேபோல் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கி உள்ளார்.
டிகே சுரேஷ் - குமாரசாமி: கர்நாடகாவை பொறுத்தமட்டில் பெங்களூர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே போட்டியிடுகிறார். பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜக சிட்டிங் எம்பியான தேஜஸ்வி சூர்யா களமிறங்கி உள்ளார். இவரை எதிர்த்து சவுமியா ரெட்டி போட்டியிடுகிறார். பெங்களூர் புறநகர் தொகுதியில் கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் களமிறங்கி உள்ளார். மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி போட்டியிடுகிறார். மைசூர்- குடகு தொகுதியில் மைசூர் மன்னர் வாரிசான யதுவீர் போட்டியிடுகிறார்.
ஹேமமாலினி: உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை மதுரா தொகுதியில் சிட்டிங் எம்பியும், நடிகையுமான ஹேமமாலினி மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் அம்ரோஹா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிட்டிங் எம்பியான டேனிஷ் அலி காங்கிரஸ் சார்பில் களத்தில் உள்ளார். மேலும் மீரட் தொகுதியில் நடிகர் அருண் கோயல் பாஜக வேட்பாளராக உள்ளார். ராமாயணம் தொடரில் ராமனாக நடித்து புகழ்பெற்ற நிலையில் அருண் கோயலுக்கு பாஜக சீட் வழங்கி உள்ளது.
பூபேஷ் பாகேல்: சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் தொகுதியில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் லோக்சபா சபாநாயகரான ஓம்பிர்லா பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications