Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

14 வயதில் பிரச்சார பயணம்.. 73 வயதிலும் “உழைப்பு உழைப்பு உழைப்பு”.. ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 14 வயதில் முதல் முதலாக திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், கட்சியில் படிப்படியாக வளர்ந்து, தமது 64 வயதில் திமுக தலைவர் ஆனார். அவர் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

1953 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மு. கருணாநிதி, தயாளு அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக சென்னையில் பிறந்தார் ஸ்டாலின். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைவதற்கு 4 நாட்கள் முன்பு பிறந்ததால், அவரது நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கலைஞர்.

மு.க.ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், விவேகானந்தா கல்லூரியில் பியுசி படிப்பையும் முடிந்தார். அதன் பிறகு 1973 ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்றார்.

MK Stalin

14 வயதில் தேர்தல் பிரச்சாரம்

மு.க.ஸ்டாலின் தனது 14 வயதில், 1967 சட்டசபை தேர்தலில் தன் தாய்மாமா முரசொலி மாறனுக்காகத் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தார். 1966 ஆம் ஆண்டே இளைஞர் திமுக என தமது நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 1970-களில் திமுக வட்டப் பிரதிநிதியாகவும், மாமன்ற பிரதிநிதியாகவும் இருந்த மு.க. ஸ்டாலின், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்றத்துடன் கட்சி பிரசாரத்திலும் ஈடுபட்டார். 1973-ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975-ல் மு.க.ஸ்டாலின், துர்கா (எ) சாந்தாவுக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். 1976 ஆம் ஆண்டு அவசர நிலை சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக சிறைவாசம் அனுபவித்தார் ஸ்டாலின். 1980 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட நிலையில் 1982 ஆம் ஆண்டு திமுக இளைஞர் அணியின் அமைப்பாளர் ஆனார் மு.க.ஸ்டாலின்.

சந்தித்த முதல் தேர்தலில் தோல்வி

1984 ஆம் ஆண்டு முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்டாலின், 1989-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதால், ஐந்து ஆண்டுகள் முழுமையாக எம்.எல்.ஏ பதவியை அவர் வகிக்க முடியாமல் போனது.

1991-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், வெற்றிபெறவில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் வெற்றிபெற்றார். அதே ஆண்டில், சென்னை மாநகராட்சி மேயராகவும் தேர்வானார். 1996 ஆம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பில் இருந்தார். மாநகராட்சி மேயராக மு.க. ஸ்டாலின் இருந்த போது, சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

கட்சியில் தலைமைப் பதவிக்கு

2003-ல் திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும், 2008-ல் திமுக பொருளாளராகவும் பொறுப்பு வகித்தார். மு.க.ஸ்டாலின் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2011 வரை தமிழ்நாட்டின் துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தார்.

2011 ஆம் ஆண்டு, ஸ்டாலின் முதல் முறையாக கொளத்தூர் தொகுதிக்கு மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். கருணாநிதி உடல் நலிவுற்று ஓய்வெடுத்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு தி.மு.க-வின் செயல் தலைவர் ஆனார் ஸ்டாலின்.

முதலமைச்சர்

மு. கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார். 2021 சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். முதல்வராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் ஸ்டாலின்.

தற்போது 73 வயதாகும் ஸ்டாலின், தன் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை எதிர் கொண்டிருந்தாலும், மிசா கைதியாக சிறையில் அனுபவித்த கொடுமைகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் அடித்தளமாகப் பார்க்கப்படுகின்றன. சிறையில் அடி, உதை பட்டு அரசியல் களத்தில் புடம் போடப்பட்ட ஸ்டாலின், இன்று வெற்றிகரமான தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

உழைப்பு உழைப்பு உழைப்பு

கருணாநிதி மகன் என்பதாலேயே இந்த இடத்துக்கு ஸ்டாலின் வந்திருக்கிறார் என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது என்றாலும், இந்த உயரத்தை ஸ்டாலின் எட்டியதற்கு அவரது உழைப்பும் தியாகமும் மிக முக்கியம் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது. கலைஞர் கருணாநிதி கூறியதுபோல, உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றாலே ஸ்டாலின் தான் என்பது திமுக தொண்டர்கள் அத்தனை பேரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

காலையில் சென்னையில் கள ஆய்வு, மாலையில் மதுரையில் மாநாடு, இரவில் திருநெல்வேலியில் கட்சியினருடன் ஆலோசனை என இப்போதும் சுற்றிச் சுழன்று வருகிறார் ஸ்டாலின். சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்த பெரிய சம்பவத்தை முடித்த கையோடு, கோவைக்கு கிளம்பி மாநாட்டில் பங்கேற்றது தான் ஸ்டாலினின் அரசியல் ஸ்டைல். ஸ்டாலினின் அசாத்திய உழைப்பு அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம் என்றால் மிகையில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+