ஆதாரம் இல்லாமல் பேசுறாங்க! சபரீசனுக்கும் எனக்கும் தொடர்பா? சவால் விட்ட ஜி ஸ்கொயர் நிறுவனர்
சென்னை: ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் - ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள அந்த நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம், தொடர்பு இருக்கு என்று நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என்றால், நிறுவனத்தின் 50 சதவீத பங்கை இலவசமாகவே கொடுக்கிறேன் என்று சவால் விட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு முழு வீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய தவெக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக
இந்த திட்டத்திற்காக சுமார் 50% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், திட்டம் ரத்து செய்யப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் திமுக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. திமுகவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக தான் திமுக எம்எல்ஏ-க்கள் கதறுகிறார்கள் என்று தெரிவித்தார்.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜி ஸ்கொயர் பரந்தூரில் அதிக இடங்களை வாங்கி போட்டு இருப்பதாகவும் அதன் காரணமாகவே திமுக அதிகம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தவெகவினர் வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் தகவல்களை பரப்பினர். இதையடுத்து பரந்தூரில் தங்களுக்கு இடமே கிடையாது என்று ஜி ஸ்கொயர் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கை கடந்த 2 தினங்களாக மீண்டும் வைரல் ஆனது.
எந்த தொடர்பும் கிடையாது
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயம், தனது நிறுவனத்திற்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜி ஸ்கொயர் பாலா ராமஜெயம் கூறியதாவது:-
சட்டசபையில் ஆதாரம் இன்றி ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேசியவர்கள் மீது ஆதாரம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் வழங்கப்படாத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பின் 25 நாட்களுக்குள் கட்டுமானம் மற்றும் இதர அனுமதி வழங்கப்படுவதை வரவேற்கிறேன்.
இதுவரை ரியல் எஸ்டேட் துறையில் ரொக்கமாக இல்லாமல் பணப்பரிவர்த்தனை அடிப்படையில் பிசினஸ் செய்யக்கூடிய ஒரே நிறுவனம் ஜி ஸ்கொயர். எங்கள் நிறுவனத்தை முன்னாள் ஆட்சியாளர்களோடு தொடர்புப் படுத்துவது ஏற்புடையதல்ல. பரந்தூர் விமான நிலையம் அமைவதாக இருந்த இடத்தை சுற்றி எனக்கோ என் குடும்பத்தாருக்கோ இடம் இல்லை.
ஓபனாக சவால் விடுக்கிறேன்
எப்போதெல்லாம் என் நிறுவனத்தை சபரீசனோடு இணைத்து பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் எனக்கு மிக வருத்தமாக உள்ளது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு யாரோ ஒருவர் உறவு கொண்டாடுவதைப் போல் இருந்தது. நான் ஓபன் சவால் விடுக்கிறேன். என் கம்போனியோட மதிப்பு ரூ.10,000 கோடி. கடன் 2,300 கோடி.. எல்லா வருடமும் புக் பைல் பண்ணிருக்கேன். என்னிடம் சோதனை நடத்தாத ஏஜென்சிகளே இல்லை. நீங்க எல்லோரும் சேர்ந்து எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்துவிட்டால் 50 சதவீத பங்குகளை இலவசமாக எழுதி கொடுத்துட்டு போகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
