பரந்தூரில் நிலம் இல்லை.. நிரூபித்தால் ரூ.1க்கு தருகிறோம்.. டிரெண்டாகும் ஜிஸ்கொயர் பழைய அறிக்கை!
சென்னை: பரந்தூரில் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை என்றும், அப்படி நிலம் இருப்பதாக நிரூபித்தால் அதனை 1 ரூபாய்க்கு திருப்பி அளிக்கிறோம் என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த அறிக்கையில் அரசியல் காரணங்களுக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே விமான நிலையம் அமைக்க சுமார் 50% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், அரசின் நிலம் 40% இருக்கிறது. சுமார் 80% நிலம் கையகப்படுத்தப்பட்ட சூழலில், முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் திமுக, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பரந்தூர் விமான நிலையம் வரவில்லை என்றால், சென்னையின் வளர்ச்சி 15 ஆண்டுகளுக்கு பாதிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வாதிட்டார். இருப்பினும் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படக் கூடாது என்று தவெக அறிவித்துள்ளது.
அதேபோல் சட்டசபையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசுகையில், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக தான் திமுக எம்எல்ஏ-க்கள் கதறுகிறார்கள் என்று தெரிவித்தார். அதற்கு தங்கம் தென்னரசு, எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்க தவெக முயற்சிக்கிறது என்று பதிலடி கொடுத்தார்.
இதனால் தவெகவினர் பரந்தூரில் ஜி ஸ்கொயர் அதிக முதலீடுகளை செய்துள்ளது என்று சோசியல் மீடியாவில் பேசத் தொடங்கினர். இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட்ட அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த அறிக்கையில், பரந்தூரில் எங்கள் நிறுவனத்திற்கு எந்த இடமும் இல்லை.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். பரந்தூர் பகுதியில் நிலம் இருப்பதாக நிரூபித்தால் அதனை 1 ரூபாய்க்கு திருப்பி அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீண்டும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
