Gandhi Jayanti: தொடர் விடுமுறை.. ஊருக்கு கிளம்புறீங்களா?.. 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சென்னை: காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கூடுதலாக 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் சிறப்புப் பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கம். அந்த வகையில், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.

தொடர் விடுமுறை
அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து வார இறுதி விமுறையும், மாணவ, மாணவிகள் பலருக்கு தேர்வு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவார்கள். இதனால், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கூடுதலாக 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தொடா் விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட இடங்களுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 1) 1,580 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) 745 பேருந்துகளும், சனிக்கிழமை (அக்டோபர் 3) 895 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இதுபோல, கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வியாழக்கிழமை 220 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 115 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதுபோல, பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை, பெங்களூரு பயணிகள்
மேலும், மாதவரத்திலிருந்து வியாழக்கிழமை 185 சிறப்பு பேருந்துகளும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூா், ஒசூா், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தலா 90 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இவைதவிர, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகள் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து 1,471 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,706 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
