சிக்னலை உடைத்து நடு காட்டுக்குள் ரயிலை நிறுத்திய கொள்ளையர்கள்.. சென்னை ரயிலில் பயணிகளிடம் திருட்டு
சென்னை: சென்னை நோக்கி வந்த ஹைதரபாத் எக்ஸ்பிரஸ் ரயிலை நடு வழியில் நிறுத்த வைத்த கொள்ளையர்கள், பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது வழக்கம் போல ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு நேற்று முன் தினம் வந்து கொண்டு இருந்தது. சென்னை நோக்கி வந்த இந்த ரயிலில் பயணிகள் நூற்றுக்கணக்கானோர் பயணித்தனர். இந்த ரயில் அதிகாலை 1.20 மணியளவில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிங்கரய கொண்டா மற்றும் கவாலி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டு இருந்தது.

ரயில் வேகமாக வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ரயிலுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், நடு வழியில் ரயிலின் லோகோ பைலட் வண்டியை நிறுத்தினார். பயணிகள் பலரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். சுற்றிலும் கும்மிருட்டாக அப்பகுதி காட்சி அளித்த நிலையில், திடீரென ரயிலுக்குள் 6 பேர் கோண்ட கும்பல் ஒன்று புகுந்தது. ஸ்லீப்பர் வசதி கொண்ட செக்கண்ட் கிளாஸ் பெட்டிக்குள் அந்த கொள்ளை கும்பல் புகுந்தது.
திடீரென ரயிலுக்குள் சத்தம் கேட்பதை உணர்ந்த பயணிகள் திடுக்கிட்டு விழித்தனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டிய கொள்ளையர்கள், பயணிகளிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் செல்போன், பணத்தை கொள்ளையடித்தனர். இதனால் பயந்து போன பயணிகள், தங்களிடம் கொள்ளையர்களிடம் கெஞ்சி கேட்டும் விடாமல் கொள்ளையடித்து விட்டு சென்றனர். கொள்ளையடித்த கையோடு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே, அதே வழித்தடத்தில் செகந்திராபத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலும் சிக்னல் கிடைக்காததால் நடு வழியில் நிறுத்தப்பட்டது. ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டது.
இதற்காக அந்த ரயிலிலும் கும்பல் ஏற முயற்சித்தது. ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை கவனித்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதனால், உஷார் ஆன கொள்ளை கும்பல் இறங்கி ஓடியது. மேலும் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது கற்களை வீசி விட்டு தப்பி ஓடினர். இதனால், போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இரண்டு ரயில்களும் புறப்பட்டு கவாலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. அங்கு ரயில்வே போலீசாரிடம் பயணிகள் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் ரயிலை நிறுத்த வைத்து கொள்ளை கும்பல் சென்னை நோக்கி வந்த ரயிலில் கொள்ளையடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரபையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications