நடிகை கவுதமியிடம் நில மோசடி+ சட்டவிரோத பணப்பரிமாற்றம்.. தொழிலதிபர் அழகப்பனை கைது செய்த அமலாக்கத்துறை
சென்னை: நடிகை கவுதமி நில மோசடி வழக்கில் தொழிலதிபர் அழகப்பன் கைது செய்யப்பட்டார். கவுதமி அளித்த புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் கௌதமி. இவர், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு கௌதமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பவர் ஆப் அட்டர்னியாக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த அழகப்பன், ஸ்ரீபெரும்புதூரில் தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி தன்வசப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அழகப்பனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்த நில மோசடியில் பெரும் அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் பரிந்துரையின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை கையில் எடுத்தனர். கடந்த ஜூன் மாதம் அழகப்பனுக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அழகப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அழகப்பன் விசாரணைக்கு ஆஜரானார்.
அழகப்பனிடம் அதிகாரிகள் நடத்திய நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
