துபாய் ஹோட்டல்ல நடந்தத சொன்னா.. அசிங்கமா போய்டும்னு சொல்லியிருக்காரு அண்ணாமலை.. கொந்தளித்த காயத்ரி
சென்னை: துபாய் ஹோட்டலில் என்னை பற்றி அண்ணாமலை மிகவும் மோசமாக பேசியுள்ளார் என பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். மேலும் ஆதாரமே இல்லாமல் ஒரு பெண்ணை பற்றி எப்படி அவதூறாக பேச முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பாஜகவில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவுடன் கடந்த இரு மாதங்களாக விசாரணைக்காக கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய இமெயிலிலும் என் தரப்பு விளக்கத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளேன்.
அதையும் தாண்டி விசாரணையே இல்லாத நிலையில் என்னை குறி வைத்து வார் ரூமிலிருந்து அவதூறு செய்திகளை பரப்பினர். நான் துபாய் ஹோட்டலில் என்ன செய்து கொண்டிருந்தேன். என்னிடம் என்ன மாதிரியான ஆதாரங்கள் உள்ளன என்றெல்லாம் என்னை கேள்வி கேட்டு வருகிறார்கள்.

விசாரணைக்கு காத்திருந்தேன்
விசாரணைக்காக காத்திருக்கும் என்னை இப்படி குறி வைத்து அவதூறு பேசும் போது கூட மாநில தலைவரான அண்ணாமலையும் அவர்களை தடுக்கவில்லை. பெண் குறித்து இப்படியெல்லாம் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி நான் 2 மாதங்களாக விசாரணைக்காக காத்திருந்தேன். ஹனி டிராப் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.

15 வீடியோக்கள்
அதுகுறித்த சம்பவங்களை புலனாய்வு பத்திரிகை ஒன்று மீண்டும் ஆராய்ந்துள்ளது. அதில் மதன் ரவிசந்திரன் 15 வீடியோக்களை வைத்திருக்கிறார், பாஜக தலைவர்கள் தொடர்பான வீடியோக்களையும் அவர் வைத்துள்ளார். ஹனி டிராப் என்பது பெண்களுக்கு ஆபத்தான விஷயம். துபாய் ஹோட்டலில் நான் என்ன செய்தேன் என்பது குறித்து 150 பேருக்கு மத்தியில் அண்ணாமலை மிகவும் கொச்சையாக பேசியிருந்தார்.

அசிங்கமாகிவிடும்
அது பற்றி நான் பேசினால் அது அசிங்கமாகிவிடும் என கூறியிருந்தார். இது தவறாக போய்விட்டது. இதனால் என்னை எல்லோரும் போன் செய்து துபாய் ஹோட்டலில் என்ன செய்தீர்கள் என அசிங்கமாக கேட்டனர். நீங்கள் எது செய்தாலும் அண்ணாமலைக்கு என்ன என கேள்விகளை என்னிடம் போன் போட்டு கேட்டனர். முதலில் நான் அண்ணாமலை இப்படி பேசியிருந்திருப்பார் என நம்பிக்கை.

உறுதி செய்தேன்
பிறகு 4 அல்லது 5 பேரிடம் கேட்டு உண்மைதான் என்பது உறுதி செய்து கொண்டேன். என் பெயரை சொல்லியே அவர் பேசியதாகவும் கேள்விப்பட்டேன். இதையடுத்து நான் அண்ணாமலைக்கு மெசேஜ் செய்தேன். அந்த மெசேஜில் "நீங்கள் எப்படி என்னை பற்றி தவறாக பேசினீர்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்ணை எப்படி தவறாக பேச முடியும்? ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்" என கேட்டேன்.

அண்ணாமலையிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை
அதற்கு அண்ணாமலையிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. அதன்பின்னர்தான் புலனாய்வு பத்திரிகை ஒன்றில் அலிஷா அப்துல்லா வீடியோவும் என்னுடைய வீடியோவும் துபாயில் இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் நான் மிகவும் உருக்குலைந்துவிட்டேன். விசாரணையே இல்லாமல் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். என்னை பற்றி அண்ணாமலை சொன்னதாக வரும் தகவல்களையும் அவர் மறுக்கவே இல்லை.

கேவலமாக பேசினால் பேசட்டும்
அந்த பெண்ணை யாராவது கேவலமாக பேசினால் பேசட்டும் என அவர் பாட்டுக்கு இருக்கிறார். நாங்களும் எவ்வளவோ எதிர்த்து குரல் கொடுத்தாலும் அண்ணாமலை வைத்துள்ள தனியார் வார் ரூம்களில் இருந்து கடுமையாக விமர்சித்து பதிவுகள் வருகின்றன. நான் பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரிடமும் என் புகாரை அளித்துள்ளேன். அலிஷா அப்துல்லா தனக்கான பிரச்சினையை பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பிரஸ்மீட் வைத்தார்கள்.

சூர்யா சிவா - டெய்சி சரண்
அது போல் சூர்யா சிவா- டெய்சி விவகாரத்திலும் பிரஸ் மீட் வைக்க அனுமதித்தார்கள். ஆனால் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் என் வீட்டிலிருந்து பிரஸ் மீட் வைத்தேன். எனக்கு கட்சியிலிருந்து எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. பாஜகவின் பைலாவில் ஒருவரை விசாரணையே இல்லாமல் நீக்கலாம் என்ற விதிகள் எல்லாம் இல்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி நான் கேட்பதெல்லாம் விசாரணைதான். என்னை கார்னர் செய்ய என்ன காரணம் என தெரியவில்லை. இவ்வாறு காயத்ரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications