செம.. சாதித்த முத்துநகர்.. ஸ்டாலின் அமைச்சரவையை அலங்கரிக்கும் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அதிரி, புதிரி வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 150-க்கும் அதிகமான இடங்களை பெற்றது.

திமுக ஆட்சி
தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இந்த நிலையில் புதிய திமுக அரசின் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு
இது தவிர அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற புது முகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டமான தூத்துக்குடியில் இருந்து 2 பேர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களாக அலங்கரிக்க உள்ளனர்.

சாதித்த தூத்துக்குடி
எல்லோரும் எதிர்பார்த்தபடியே தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கீதா ஜீவனுக்கு சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கீதா ஜீவனுக்கு பதவி
கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் செல்வாக்கு மிக்கவர் ஆவார்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு
இவர் திருச்செந்தூர் தொகுதியில் 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2001 மற்றும் 2006-ல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , 2009 இடைத்தேர்தல், 2011, 2016 மற்றும் தற்போது 2021 ஆகிய தேர்தலிகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 2001-ல் அதிமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications