ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு! திமுக ஆட்சியில் சென்னையில் பணியாற்றிய போலீஸ் ஆபிசர்களுக்கு குறி?
சென்னை: சிறுமிகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி தொடர்பான வழக்கில் திமுக ஆட்சியில் இருந்த காவல் உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போது பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ திமுக ஆட்சியில் இருந்த போதே சென்னை போலீஸாருக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே சென்னை விபச்சார தடுப்பு போலீஸாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சியில் வீடியோ ஆதாரம் இருந்தும் உரிய ஆதாரம் இல்லை என வழக்கை முடிக்க முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. திமுக ஆட்சியில் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அடையாளம் தெரியாது நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும் அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வீடியோவை ஆய்வு செய்த போது வயதானவர் ஒருவர் 13 வயது மதிக்கத்ததக்க சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது.
இதன் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
வீடியோவில் இடம் பெற்றிருந்த அந்த முதியவர், பிரபல கிரானைட் தொழிலதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரியவந்தது.
மேலும் வீரமணி தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புகளை சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்புடைத்திருந்தார். அந்த வீட்டிற்குள் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும் மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகளை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து சில புகைப்படங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நிறைய சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அது போல் பல தொழிலதிபர்களுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரமணியை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தவெக அரசு பொறுப்பேற்றதும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.
ஜெம் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நிலையில் திமுக ஆட்சியில் இருந்த உயரதிகாரிகளுக்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்த சென்னை போலீஸ் திட்டமிட்டிருக்கிறது. இதனால் அடுத்தடுத்து யாரிடம் விசாரணை நடத்தப்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
