ஜெம் வீரமணி வழக்கு.. சாந்தி & அவரது கணவரிடம் 8 மணி நேரமாக விசாரணை.. தோண்டித் துருவிய போலீசார்!
சென்னை: ஜெம் வீரமணியின் பாலியல் வெறியாட்டங்களுக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனிடம் போலீசார் 8 மணி நேரம் விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர். சாந்தி மற்றும் அவரது கணவரிடம் 200 கேள்விகளை கேட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தில், அவரது உதவியாளரும் நெருங்கிய தோழியுமான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு சிறுமிகளை வீரமணியிடம் அழைத்துச் சென்றதாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டார். சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெம் வீரமணியை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, தற்போது சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின்போது, பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரமணியுடன் சாந்திக்கும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுக்கும் இருந்த தொடர்பு, வீரமணியுடன் அவர்கள் எவ்வளவு காலமாக தொடர்பில் இருந்தனர், வழக்கில் அவர்கள் வகித்ததாகக் கூறப்படும் பங்கு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சிறுமிகளை எவ்வாறு நோட்டமிடுவது, பின்னர் அவர்களை எப்படி அணுகுவது, அவர்களுக்கு நிதி உதவி செய்வதாக ஆசை காட்டி, அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது எப்படி என்றும், ஜெம் வீரமணியின் தொழில் நண்பர்களுடன் சிறுமிகளை தனிமையில் இருக்கச் செய்து காரியம் சாதித்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், வீரமணியின் அந்தரங்க நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்து, அதை காட்டி பணம் பறித்ததாகவும், தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கில் சில முக்கிய பிரமுகர்களை அணுகியதாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் அளித்த பதில்களை போலீசர் வீடியோவாகவும், வாக்குமூலமாகவும் பதிவு செய்துள்ளனர்.
சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் விடிய விடிய சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும், வழக்கில் மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கும் வகையில் போலீசார் சுமார் 200 கேள்விகளை எழுப்பியதாகவும் அதற்கு பதில்களைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
