ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டிப்பு.. வீடியோ வெளியிட ஐகோர்ட் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9-ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோவை வெளியிட்ட ஊடகங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை போலீசார் கைது செய்யப்பட்டார். வீரமணி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பணம், செல்போன் மற்றும் ஆடம்பரப் பரிசு பொருட்களை வீரமணி கொடுத்து, தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டாராம். இவரால் 25 வருடங்களில் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த வழக்கில் வீரமணியின் தேனாம்பேட்டை வீட்டை கவனித்து வந்த அவரது உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

Gem Veeramani

இதன் தொடர்ச்சியாக வீரமணி, சிறுமிகளுடன் இருந்த ரகசிய வீடியோக்களை வைத்திருந்தவரும், 23 ஆண்டுகள் ஜெம் கிரானைட்ஸில் பணிபுரிந்தவரும், தற்போது பாலாஜி குளோபல் எண்டர் பிரைசஸில் பணிபுரியும் கணேசன் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஐஜி தலைமையில் உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இக்குழு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து கவனிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக வீரமணியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவலை வரும் அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த துளிர் அறக்கட்டளை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், 'குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த இந்தச் சம்பவங்கள் கடந்த 2025-ஆம் ஆண்டு கிடைத்த ஒரு பென் டிரைவின் மூலம் தெரியவந்திருக்கிறது. எனினும் இந்த வழக்கை கடந்த 2026-ஆம் ஆண்டு போலீஸார் முடித்து அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், அந்த அறிக்கையை ஏற்க மறுத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோ காட்சிகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

வீரமணி வழக்கில் சிறுமிகளின் வீடியோக்கள் ஊடகங்களில் ஒளிபரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறைக்கு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகாரை பரிசீலித்து, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து இந்த காட்சிகளை நீக்க வேண்டும். காட்சிகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோக்களை ஒளிபரப்ப அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்' இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த வழக்கு தொடர்பாக வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக விவாதங்கள் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+