காலாண்டு தேர்வுக்கு பொது வினாத்தாள்.. 6 - 12 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அப்டேட்
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டு தேர்வை, பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் திறப்பில் கால தாமதம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கியதை அடுத்து நடப்பாண்டுதான் பள்ளிகள் கடந்த ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது. 2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதனிடையே 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டு முதல் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
கடந்த காலங்களில் 10, +1, +2 வகுப்புகளுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த முறை 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய கற்றல் அடைவு திறன் கணக்கீடு மற்றும் காலாண்டு தேர்வுகள் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கக இயக்குனர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சம் விலகும். 6ஆம் வகுப்பு முதலே பொது வினாத்தாளில் தேர்வு எழுதி பழகி விட்டால் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த பயமோ, பதற்றமோ இருக்க வாய்ப்பில்லை என்பது கல்வியாளர்கள் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications