செஞ்சி சிறுமி மாயம்.. Undetected கேஸ்! அடுத்தடுத்த முட்டுச்சந்து! வழக்கை மெதுவாக கைவிடும் சிபிசிஐடி?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து இன்றுடன் 28 நாட்கள் முடிவடைந்துவிட்டன. அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.

உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், பொதுமக்கள் போராட்டம் வெடித்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் பள்ளி முகாம், மோப்ப நாய்கள், ரவுடி ராஜதுரை, அரவிந்த், 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், நாமக்கல் தாதகிரி முருகன் கோவில், வில்லுப்பாட்டு குழுவினர் என ஆரம்பத்தில் ஏகப்பட்ட அதிரடி காட்டப்பட்டது.

Gingee Missing Girl Case Is CB-CID Slowly Burying the 28-Day Investigation as Leads Run Cold

ஆனால், கடந்த சில நாட்களாக வழக்கில் எந்தவொரு குறிப்பிடத்தக்க நகர்வும் முன்னேற்றமும் இன்றி ஒட்டுமொத்தப் புலனாய்வும் அப்படியே தேங்கிப் போய் நிற்கிறது. வழக்கில் எந்தத் துப்பும் கிடைக்காததால், சிபிசிஐடி இந்த விவகாரத்தை மெல்ல மெல்லக் கிடப்பில் போடப் பார்க்கிறதா? என்ற கடுமையான சந்தேகமும் கொந்தளிப்பும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

ஆரம்பத்தில் பாய்ச்சல்... இப்போது தேக்கநிலை!

சிபிசிஐடி கையில் எடுத்த முதல் இரண்டு வாரங்களில், தினமும் ஒரு புதிய கோணத்தில் போலீசார் தீவிரமாகச் சுழன்றடித்தனர்:

நடுப்பட்டு கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விசாரணை மற்றும் அவரது தற்கொலை முயற்சி. சாமியார் சரவணன் தப்பியோட்டம் மற்றும் நள்ளிரவு சுடுகாட்டு ஆய்வுகள். சிறையில் இருந்து எடுக்கப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி ரவுடி ராஜதுரையிடம் 4-வது முறையாக விசாரணை. நாமக்கல்லில் முகாமிட்ட உளவு அமைப்புகளான OCIU, SBCID குழுக்கள்.

இத்தனை கோணங்களில் 600-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுர அழைப்புகள் மற்றும் சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இவ்வளவு பெரிய அதிகாரப் பட்டாளம் களமிறங்கியும், இன்று வரை "குழந்தை உயிருடன் இருக்கிறாளா, எங்கே கொண்டு செல்லப்பட்டாள்?" என்ற மிக அடிப்படையான கேள்விக்குக் கூடக் காவல்துறையிடம் பதிலே இல்லை. கடந்த நான்கைந்து நாட்களாகத் தினசரி சம்பிரதாய விசாரணைகளைத் தவிர உருப்படியான கள நகர்வுகள் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை.

வழக்கை மெல்ல மூடி மறைக்க முயல்கிறதா காவல்துறை?

நாட்கள் நகர நகர, பொதுமக்களின் கவனமும் ஊடகங்களின் கவனமும் இயல்பாகவே வேறு புதிய செய்திகளை நோக்கித் திசைதிரும்பும். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, வழக்கை மெதுவாக கண்டுபிடிக்க முடியாத மர்ம வழக்கு என்ற பட்டியலுக்குத் தள்ளி ஃபைலை மூடிவிட காவல்துறை நினைக்கிறதா என்ற ஆதங்கம் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உள்ளூர் போலீசார் முதல் 10 நாட்களில் குற்ற நடந்த இடத்தைப் பாதுகாக்காமல் விட்ட அலட்சியமே இத்தனை குளறுபடிகளுக்குக் காரணம். அதைத் தோண்டி எடுத்தால் சொந்தக் காவல்துறையினரின் நிர்வாகத் தோல்வியே அம்பலமாகும் என்பதால் அதிகாரிகள் பின்வாங்குகிறார்களா?

நள்ளிரவுப் பணம் பரிமாற்றம், உள்ளூர் ரவுடிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் தொடர்புகள் வழக்கில் அடிபட்ட நிலையில், அவர்கள் மீது உறுதியான மேல்நடவடிக்கை பாயாமல் தடுத்து நிறுத்தப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஒரு 7 வயதுக் குழந்தையைக் கூட ஒரு மாதமாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத மாநில உளவுத்துறையும் காவல்துறையும், ஆளும் நிர்வாகத்தின் சட்டம் ஒழுங்கு திறமையின்மையையே காட்டுகிறது. இதனால் இந்த விவகாரம் பேசுபொருளாவதைத் தவிர்க்கவே அதிகார மட்டத்தில் மௌனம் காக்கப்படுகிறதா என்ற விமர்சனங்களும் வலுக்கின்றன.

பசியில் துடிக்கும் குடும்பம்... கைவிடுமா அரசு?

"நாங்கள் 20 நாட்களுக்கும் மேலாக வேலைக்குப் போகாமல் பசி பட்டினியில் கிடக்கிறோம்; எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம், குழந்தையை மீட்டுத் தந்தால் போதும்" என்று தாய் பவானி தொடர்ந்து கண்ணீர் மல்க கதறி வருகிறார்.

விசாரணை என்ற பெயரில் நாட்களைக் கடத்துவதும், திசை தெரியாமல் முட்டுச்சந்தில் நின்றுவிட்டு வழக்கை மெல்லக் கிடப்பில் போடுவதும் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத அநீதியாகும். சிபிசிஐடி தனது மெத்தனத்தைக் கைவிட்டு, வழக்கில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையான உண்மைகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்; இல்லையேல் வழக்கை முழுமையாக சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் ஒரே குரலாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+