TMC Candidate List:தமாகா வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்!
சென்னை: தாமரை சின்னத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது தமிழ் மாநில காங்கிரஸ். ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடும் நிலையில், வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளார் ஜி.கே.வாசன். மேலும், தமாகா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார் ஜிகே வாசன்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமாகா-வுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்தார் ஜிகே வாசன்.

தமாகா - 5 தொகுதிகள்
இதையடுத்து, தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனன.
இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகிவிட்டதை அடுத்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேட்பாளர்களை இன்று அறிவித்து உள்ளார். இந்த சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை.
தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 5 தொகுதியும் ஜி.கே.வாசனுக்கு சவாலாகவே அமைந்துள்ளது. இந்த தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 3 தொகுதிகளில் தற்போதைய திமுக அமைச்சர்கள் தொகுதி.
தமாகா வேட்பாளர் பட்டியல்
ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ். சேகர் (தமாகா மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ)
ஈரோடு மேற்கு - எம். யுவராஜா (தமாகா பொதுச் செயலாளர்)
ராணிப்பேட்டை - வி.எம். கார்த்திகேயன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமாகா தலைவர்)
கிள்ளியூர் - நிவின் சைமன் (தமாகா தென் மண்டல இளைஞரணி துணை தலைவர்
கும்பகோணம் - எம்.கே.ஆர் அசோக் குமார் (தமாகா மாநில செயலாளர்)
ஜிகே வாசன் பேட்டி
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜிகே வாசன், “எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தேசிய அளவில் தாமரை சின்னம் இரட்டை இன்ஜின் சின்னம் என்பதாலும், பாஜகவுடன் நாங்கள் நேரடி கூட்டணியில் இருப்பதாலும் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.” என ஜிகே வாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications