வரலாறு காணாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலை உச்சம்! சென்னையில் 1 கிராம் தங்கம் ரூ.5000த்தை நெருங்கியது
சென்னை: சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் பெற்றுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 74 உயர்ந்து ரூ 4 ஆயிரத்து 978 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40,000 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது. சென்னையில் 22 கேரட், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரே வாரத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2208 ரூபாய் அதிகரித்து, தற்போது வரலாறு காணாத புதிய உச்சம் அடைந்துள்ளது.
தங்கத்துக்கு நாங்கள் மட்டும் குறைந்தவர்களா என்று கேட்கும் அளவுக்கு வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. புதிய உச்சத்தை தொட்டுள்ளது வெள்ளி விலை. ஒரு கிராம் வெள்ளி விலை, 3 ரூபாய் 90 காசுகள் அதிகரித்து, 70 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பது, இந்தியா-சீனா இடையேயான பதற்றம், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர், அமெரிக்க தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்த துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
