916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு
சென்னை: நாம் ஆசை ஆசையாக வாங்கும் 916 KDM நகைகளுக்கு பின்னால் பலருக்குத் தெரியாத சில நடைமுறை உண்மைகள் ஒளிந்துள்ளன.. இதனை சரியாக புரிந்து கொள்ளாமல் நகை வாங்குவது பிற்காலத்தில் நமக்கு நிதி ரீதியாகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.. அதை பற்றிதான் இங்கு சுருக்கமாக பார்க்க போகிறோம்.
சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்களது வாழ்நாள் சேமிப்பைத் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெருமையாக நினைக்கிறார்கள்.. அதுவும் நம்ம தமிழகத்தில் நகை வாங்குவது என்பது ஒரு சென்டிமென்ட் கலந்த விஷயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது..

எனவே, 916 தங்கம் என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.. 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருப்பதைத்தான் 916 என்று சொல்வார்கள்.
தங்க நகைகள் செய்முறை
அந்த காலத்தில், நகைகளை செய்யும்போது தங்கத்துடன் செம்பு அல்லது காட்மியம் கலக்கப்படும்.. இதில் காட்மியம் சேர்த்து செய்யப்படும் நகைகளைத்தான் KDM என்று அழைத்தார்கள்.. ஆனால், இந்த காட்மியம் கலந்த நகைகளை செய்வதால் அந்த தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டது.. அதனால்தான் அரசு KDM முறைக்கு தடை விதித்து விட்டது.
இப்போதுள்ள நவீன சூழலில் பிஐஎஸ் (BIS) ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட நகைகளே பாதுகாப்பானவை.. நீங்கள் நகைக்கடைக்கு செல்லும்போது கடைக்காரர்கள் 916 KDM என்று சொன்னால், அது பழைய முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
916 பிஐஎஸ்
இப்போது புழக்கத்தில் இருப்பது பிஐஎஸ் 916 ஹால்மார்க் முத்திரை மட்டுமே.. ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளில் அந்தத் தங்கத்தின் தூய்மை உறுதி செய்யப்படுகிறது.. நீங்கள் அந்த நகையை மீண்டும் விற்கச் செல்லும்போது, அதன் தரம் குறித்து எந்தச் சந்தேகமும் எழாது.. இதனால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும்..
அடுத்ததாக, செய்கூலி மற்றும் சேதாரம் என்பதில் பல நுணுக்கங்கள் உள்ளன.. ஒரு நகையை செய்ய வேண்டுமானால் அதற்கு கடுமையான உழைப்பு தேவை, எனவேதான் அதற்கு செய்கூலி வசூலிக்கப்படுகிறது..
செய்கூலி சேதாரம் என்பது என்ன
ஆனால் ஒவ்வொரு கடைக்கும் இந்தச் செய்கூலி மாறுபடும்.. சில கடைகளில் சேதாரம் இல்லை என்று விளம்பரம் செய்வார்கள்.. ஆனால், அவர்கள் அந்த லாபத்தை செய்கூலியில் சேர்த்துவிடுவார்கள்.. எனவே ஒரு சவரன் நகை வாங்கும்போது, அதன் மொத்த விலையில் தங்கம், செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி (GST) இவையெல்லாம் எவ்வளவு என்று தனித்தனியாகப் பிரித்துக் கணக்குப் பார்க்க வேண்டும்..
916 நகைகளை வாங்கும்போது அதன் பின்புறம் பிஐஎஸ் லோகோ, தூய்மையைக் குறிக்கும் 916 எண் மற்றும் அந்த நகையைச் செய்த கடையின் குறியீடு இருக்கிறதா என்பதையும் செக் செய்து கொள்ள வேண்டும்.. இது இல்லாமல் நீங்கள் நகை வாங்கினால், பிற்காலத்தில் அந்த நகையை மாற்றும்போதோ அல்லது விற்க முற்படும்போதோ உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தங்கம் வாங்கும்போது கவனம்
அதிலும் பழைய தங்கத்தை மாற்றும்போது, புதிய நகையின் விலையில் பழைய தங்கத்தின் மதிப்பைக் கழிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்..
தங்கம் என்பது வெறும் அலங்கார பொருள் மட்டுமல்ல, அது ஆபத்துக் காலத்தில் உதவும் ஒரு பெரும் சொத்து.. எனவே நகைக்கடைக்கு செல்லும் முன்பு இன்றைய தங்க விலை நிலவரத்தை தெரிந்து கொள்வதுடன், பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையின் அவசியத்தையும் உணர்ந்து கொள்வது உங்களை ஏமாற்றத்தில் இருந்து காக்கும்.. இந்த எளிய கணக்குகளைத் தெரிந்து கொண்டு தங்கம் வாங்கினால், உங்களின் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் முதலீடு செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை..!!!












Click it and Unblock the Notifications