சென்னை கீழ்ப்பாக்கத்தில் 3 கோடி ரூபாய் தங்க நகைகள்.. கூண்டோடு கம்பி எண்ணும் வங்கி ஊழியர்கள்
சென்னை: சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் ரூ.3.15 கோடி மதிப்புள்ள அடகு நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதில் கவரிங் நகையை வைத்து ஏமாற்றிய வங்கி கிளை நிர்வாகிகள் மொத்தமாக சிக்கி உள்ளனர். வங்கி ஊழியர்களான புழல் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 58), கொரட்டூரைச் சேர்ந்த சரவண பாபு (58), கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கோபிகா (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த துரைபாபு ஜனார்த்தனன் (50), புரசைவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (36) மற்றும் சுனிதா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பொதுமக்கள் அடமானம் வைத்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகளை அந்த வங்கியின் மேலாளரே திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. உண்மையான அடகு நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதில் போலியான நகைகளை வைத்து நூதன திருடியது தெரியவந்தது. . இதுதொடர்பாக, வங்கி நிர்வாகம் சென்னை அயனாவரம் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தது.

அந்தப் புகாரில், அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் உதவி மேலாளராக பொட்னூரு முரளி கிருஷ்ணா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளை முறைகேடாக எடுத்துச் சென்றுவிட்டாராம். அவர் அதற்கு பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கிக்கு சுமார் ரூ.3.09 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் சுமார் 21 வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த சுமார் 2,179 கிராம் தங்க நகைகளை உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா முறைகேடாக எடுத்துச் சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாம்..
மேலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த அசல் தங்க நகைகளுக்கு பதிலாக, போலி நகைகளை மாற்றி வைத்து, திருடிய நகைகளை வேறு இடங்களில் அடமானம் வைத்து பணம் பெற்றது தெரிய வந்திருந்தது. தொடர்ந்து, அந்தப் பணத்தை ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும், தனது சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தியதினாராம். இதன்மூலம் வங்கிக்கு சுமார் ரூபாய் 3.09 கோடி இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரான வங்கி உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா (வயது 34) என்பவரை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் இதுபோன்ற ஒரு அடகு நகை திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த வங்கியில் பணியாற்றும் மேலாளர்கள் உள்பட ஊழியர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் அடகு வைத்த உண்மையான நகைகளை திருடிவிட்டு, அவற்றிற்கு பதில் போலி நகைகளை வைத்துள்ளனர்.
இந்த வங்கியிலும் ரூ.3.15 கோடி அளவிற்கு அடமான நகைகள் திருடப்பட்டிருந்தாம். இதுதொடர்பாக வங்கி ஊழியர்களான புழல் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 58), கொரட்டூரைச் சேர்ந்த சரவண பாபு (58), கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கோபிகா (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த துரைபாபு ஜனார்த்தனன் (50), புரசைவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (36) மற்றும் சுனிதா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் புருஷோத்தமன் வங்கியில் உதவியாளராக உள்ளார். சரவண பாபு சீனியர் மேலாளராக உள்ளார். கோபிகா துணை மேலாளராகவும், துரைபாபு ஜனார்த்தனன் மேலாளராகவும், விக்னேஷ் தூய்மை பணியாளராகவும், சுனிதா குமாஸ்தாவாகவும் பணியாற்றினார்கள். கைதான இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications
