நகைக்கடன், வாகன கடன்.. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் புதிய மாற்றம்! கூட்டுறவுத்துறை சூப்பர் செயலி
சென்னை: கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த செயலியில் உள்ள அம்சங்கள் என்னென்ன? என்பது குறித்த முக்கிய தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சென்னையில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் குறித்த புதிய செயலியை அமைச்சர் துவக்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் சொன்னதாவது:

கூட்டுறவுத்துறை: "கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை வழங்கும் அனைத்து சேவைகளையும் மக்கள் எளிதாக்கி வருகிறது.. அதன்படி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய "கூட்டுறவு" என்ற செயலியை கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த "கூட்டுறவு" செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதுடன் கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடவும் முடியும்.
செயலி: இந்த செயலியில் பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், கடன் விண்ணப்பம், இ-வாடகை, வங்கி சேவை, உங்கள் சங்கம், இ-சேவை, மருந்தகம், கிடங்கு, நியாயவிலைக் கடை, தொடர்புக்கு, அலுவலகம் என்ற தலைப்புகளில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.
இந்த செயலி குறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சொன்னதாவது: "கூட்டுறவு வங்கிகள் மூலம் நகை மதிப்பில் 75 சதவீதம் வரை கிராமுக்கு ரூ.5000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான வட்டிவிகிதம் 9 முதல் 10.50 சதவீதம் ஆகும். தனிநபர் ஒருவருக்கு ரூ.30 லட்சம் வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
வாகன கடன் வசதி: இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் 12 சதவீத வட்டி விகிதத்தில் வாகன கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, கூட்டுறவு துறையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள்: இச்செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகைக்கடன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், பொது மக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப, கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையில், இச்செயலியில் கடன் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், கடன் விண்ணப்பங்கள் தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணையவழி சமர்ப்பிக்கப்பட்டு, கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கடன் தகவல்களை தெரிந்து கொள்ளவும், கடன் விண்ணப்பத்தினை இணைய வழியில் சமர்ப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக் கடன்களை கடன் விண்ணப்பம் என்ற பகுதியில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள்: இச்செயலியின் தொகுப்பில் உங்கள் சங்கம் என்ற பகுதியில், பொது மக்கள் தங்களது பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் அமைந்துள்ள விவரங்களை தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இ-வாடகை என்ற பகுதியில், ஒரு உறுப்பினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் சேவை மையங்கள் குறித்த விவரங்களையும், வேளாண் பொறியியல் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப, வேளாண் பொறியியல் இயந்திரங்களின் இருப்பு நிலைினை அறிந்து, தேவையான வேளாண் உபகரணங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்படுத்திட ஏதுவாக இ வாடகை பகுதியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி சேவை முகவரி: வங்கி சேவை பகுதியில், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முகவரியினை தெரிந்து கொண்டு வங்கியினை தொடர்பு கொள்ள வங்கியின் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் மற்றும் மின் அஞ்சல் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி சேவைப் பகுதியில், கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விவரங்கள், வழங்கப்படும் கடன் உச்ச அளவு, திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச கால அளவு, வட்டி விகிதம், கடன் வழங்கும் காரியம் போன்ற விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர் நாள்: பணியாளர் நாள் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இசேவை என்ற பகுதியில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் பொது சேவை மையங்களின் முகவரி, அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுக்கா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் இருப்பிட விவரத்தினை தெரிந்துகொண்டு பயன் பெறலாம்.
மருந்தகம்: செயலியில், மருந்தகம் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகங்களின் விவரங்களை, அவர்களது மாவட்டம் மற்றும் நிறுவனத்தின் பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் பொது மக்கள் அவர்களது பகுதியில் உள்ள கூட்டுறவு மருந்தகங்களை தெரிந்து கொண்டு, 20% தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன் பெறலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் 100 மெ.டன், 500 மெ.டன், 1000 மெ.டன் மற்றும் 2000 மெ.டன் அளவுகளில் கிடங்குகள் கட்டப்பட்டு, கிடங்கு மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாய உறுப்பினர்களுக்கு அவர்களது விலை பொருட்களை பாதுகாப்பாக வைத்திடவும், விலைப்பொருட்கள் மீது தானிய ஈட்டுக் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிடங்குகள்: இச்செயலியில் கிடங்கு என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கிடங்குகளின் முகவரி மற்றும் அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய உறுப்பினர்கள் கிடங்கு வசதியினை குறைந்த வாடகையில் பெற்று பயன் பெறலாம்.
கூட்டுறவுச் செயலியில், நியாயவிலைக் கடை என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் விவரங்கள் அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுக்கா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடை முகவரி, தொலைப்பேசி எண் விவரங்களை இச்செயலி மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார் அமைச்சர்.
இந்த செயலியில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் அடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications