பட்ஜெட் ஓகே.. ஆனா தங்கம் விலை அடுத்து என்ன ஆகும்? ஆனந்த் சீனிவாசன் சொன்ன ரொம்பவே முக்கியமான மேட்டர்
சென்னை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நிலையில், அதற்குப் பலரும் வரவேற்றனர். இதற்கிடையே இறக்குமதி வரி குறைக்கப்பட்டது நல்லது தான் என்றாலும் தங்கம் விலை நீண்ட கால நோக்கில் அதிகரிக்கவே செய்யும் என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தல் இருந்ததால் கடந்த பிப். மாதம் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே முழு பட்ஜெட்டை அவர் நேற்று தான் தாக்கல் செய்தார். அதில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சந்தையிலும் 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 400 வரை சரிந்தது. இதற்கிடையே தங்கம் விலை சரிவது தொடர்பாகவும் இதில் சாதக பாதங்கள் என்ன என்பது தொடர்பாகவும் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நல்லது ஆனாலும் சிக்கல் இருக்கு: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "மத்திய பட்ஜெட்டில் ஒரு பக்கம் கொடுப்பது போலக் கொடுத்துவிட்டு மற்றொரு பக்கம் ஃப்யூஸை பிடுங்கிவிட்டார்கள் என்பதே உண்மை. மத்திய அரசு வருமான வரியில் புதிய வரித் துறையில் இருப்போருக்கு மட்டுமே எல்லா சலுகைகளையும் அறிவிக்கிறார்கள். பழைய வரி முறையில் உள்ளவர்களைக் கண்டுகொள்வதே இல்லை.
இதைப் பார்த்தால் அடுத்த 2, 3 ஆண்டுகளில் பழைய வரி முறையை முழுமையாக நிறுத்திவிடுவார்கள் போல.. இதற்காக வீட்டுக் கடன், எல்ஐசி போட்டவர்கள் நிலையை நினைத்தால் பாவம் தான். இது ஒரு பக்கம் இருக்கட்டும் புதிய வரி முறையில் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ரூ.17,500 வரை வரி விலக்கு கிடைக்கும்.
முக்கிய பிரச்சினை: இது ஒரு பக்கம் இருந்தாலும் நீண்ட கால மூலதன ஆதாய வரியை (long term capital gain tax) 10%இல் 12.5%ஆக உயர்த்தியுள்ளனர். அதேபோல வீடு, நிலத்தை விற்றால் அதற்கான நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு முன்பு indexation என்ற பலன் கிடைக்கும். அதாவது பணவீக்கத்திற்காகக் குறிப்பிட்ட தொகைக்கு indexation கிடைக்கும். மற்ற தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். ஆனால், இப்போது அந்த indexationஐ மொத்தமாக நீக்கிவிட்டார்கள். இதுதான் பெரிய அடி.
தங்கம் விலை: இறக்குமதி வரியைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். இதனால் மொபைல் விலை பெரியளவில் குறையும். அதேபோல தங்கத்திற்கான இறக்குமதி வரியையும் குறைத்துள்ளனர். இதனால் ஒரு கிராம் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.400 வரை குறைந்துள்ளது.
தங்கம் விலை அதிகரிக்கும் என்றீர்களே.. இப்போது குறைந்துள்ளதே என ஷாக் ஆக வேண்டாம். இது வரி குறைத்ததால் ஏற்பட்ட சரிவு மட்டுமே. இதனால் தங்கம் ஒரு கிராம் ரூ.10,000 போவது தள்ளி மட்டுமே போகிறது. தங்கம் விலை ரூ.10,000 போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. இப்போது தள்ளி மட்டுமே போகிறது. ரூபாய் மதிப்பும் சரிந்து வருவதால் தங்கம் விலை வேகமாக அதிகரிக்கவே செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications