கோடி கோடியாய் தங்கத்தில் முதலீடு செய்ய கொட்டியவர்களுக்கு ஷாக்! இன்னும் சரியுமாமே
சென்னை: தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் சரிவைச் சந்தித்த நிலையில், புதிய வாரத்தின் தொடக்கத்திலேயே மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுந்துள்ள நம்பிக்கை மற்றும் அமெரிக்கா டாலர் வலுவாகி வருவது காரணமாக, உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான அமைதி பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடிவடைந்தால் தங்கத்தின் விலை மேலும் சரிவடையலாம் எனவும், இதனால் தங்கம் விலை சில வாரங்களுக்கு தொடர்ந்து சரிவை நோக்கியே பயணிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ஜனவரி மாதத்தில் சவரனுக்கு 57,000 ஆக இருந்த தங்கத்தின் விலை செப்டம்பர் இறுதியில் 96 ஆயிரம் வரை சென்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது. நேற்றைய சூழலில் ஒரே நாளில் சவரனுக்கு 3000 ரூபாய் குறைந்து 89 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு வந்தது.
இதனால் தங்க முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை அதிகரிக்கும் என்பதால் தங்கத்தை வாங்கி வைத்திருந்தவர்கள் தற்போது அதை விற்கத் தொடங்கி இருப்பதும் தங்க விலை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

தங்கம் விலை சரிவு
மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் (MCX) சந்தையில் டிசம்பர் மாத டெலிவரிக்கான தங்கம் பத்து கிராமுக்கு ரூ.1,546 குறைந்து ரூ.1,21,905-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது 1.25 சதவீத சரிவாகும். கடந்த வாரம் தங்கம் விலை ரூ.3,557, அதாவது 2.8 சதவீதம் குறைந்தது.
இந்நிலையில், தங்கம் விலை ஏன் குறைகிறது என்று விளக்கமளித்துள்ள அஸ்பெக்ட் புலியன் அண்ட் ரிஃபைனரி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தர்ஷன் தேசாய் "அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து வருகின்றனர். அதோடு, டாலர் மதிப்பு வலுவாகி வருவதும் தங்கத்தின் மதிப்பைத் குறைத்துள்ளது," என்றார்.
அமெரிக்கா சீனா ஒப்பந்தம்
அமெரிக்க டாலர் மதிப்பை அளக்கும் டாலர் குறியீடு (Dollar Index) 0.03 சதவீதம் உயர்ந்து 98.98 ஆக பதிவானது. இதனால் தங்கம் உள்ளிட்ட நாணயம் சார்ந்த உலோகங்களின் விலை வீழ்ச்சியை கண்டுள்ளன. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கடுமையாக சரிந்தது.
MCX சந்தையில் டிசம்பர் மாத டெலிவரிக்கான வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.1,964 குறைந்து ரூ.1,45,506-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் மட்டும் வெள்ளி விலை ரூ.9,134 வரை சரிந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சரிவு தொடர்கிறது.
காமெக்ஸ் விலை
காமெக்ஸ் (COMEX) சந்தையில் டிசம்பர் மாத டெலிவரிக்கான தங்கம், அவுன்சுக்கு 61.69 டாலர் குறைந்து 4,076.11 டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இதே சமயம், வெள்ளி அவுன்சுக்கு 1.44 சதவீதம் குறைந்து 47.88 டாலராகியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் மூத்த ஆராய்ச்சி நிபுணர் ஜிகர் திரிவேதி , "அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் மலேசியாவில் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயங்களில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் விளைவாக தங்கம் போன்ற பாதுகாப்பு முதலீட்டு சொத்துகளில் தேவையும் குறைந்து வருகிறது," என்றார்.
பொருளாதார நிபுணர்கள்
இதேவேளை, அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) விரைவில் வட்டிவீதத்தை 0.25 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாணய சந்தையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்தின் எதிர்காலம் குறித்து பேசியுள்ள தர்ஷன் தேசாய் "தங்கம் குறுகிய காலத்தில் திடீர் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம். வர்த்தக ஒப்பந்தம் குறித்து நேர்மறை தகவல்கள் வெளிவந்தால், தங்கத்தில் மேலும் விலை சரிவு நிகழலாம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்க முதலீட்டாளர்கள்
கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்டிருந்த தங்கம், தற்போது தொடர்ச்சியான சரிவை சந்திப்பது முதலீட்டாளர்களை சற்றே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், நிபுணர்கள் இது தற்காலிகம் மட்டுமே என்றும், நீண்ட காலத்திற்கு பிறகு தங்கம் மீண்டும் எழுச்சி பெறும் என்றும் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications