சென்னையில் ஆபரண தங்கம் கடும் வீழ்ச்சி.. ஒரு சவரன் ரூ. 2080 குறைந்தது.. பட்ஜெட்டை தொடர்ந்து சரிவு
சென்னை: இன்று மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைப்பதாக அவர் அறிவித்தார். இத்துடன் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், இதனால் நாடு முழுக்க தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.2080 வரை குறைந்துள்ளது.
நமது நாட்டில் தங்கம் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதல் சேமிப்பாக இருந்து வருகிறது. இத்தனை காலம் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15%ஆக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இறக்குமதி வரி: இதற்கிடையே தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15%இல் இருந்து 6%ஆக குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பு ஒரு பக்கம் என்றால் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையிலும் அது எதிரொலித்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.250 வரை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் காலையில் தங்கம் விலை ரூ.25 ரூபாய் குறைந்து விற்பனையானது. இதற்கிடையே பட்ஜெட் அறிவிப்பு வந்த கையோடு, சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சரிந்ததால் ஒரு கிராம் தங்கம் ரூ.250 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை: அதேபோல சென்னையிலும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் காலை ரூ.15 மட்டுமே குறைந்து விற்பனையானது. சர்வதேச சந்தை எதிரொலியாகச் சென்னையிலும் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.260 குறைந்துள்ளது. அதேபோல சவரனுக்கு ரூ.2080 குறைந்ததுள்ளது. இப்போது சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 6495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் மக்கள் தங்கம் அதிகம் வாங்குவார்கள் என்றும் விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
என்ன காரணம்: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%இல் 6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது BCD எனப்படும் அடிப்படை சுங்க வரி 10%இல் இருந்து 5% ஆகவும், விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (AIDC) 5%இல் 1% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தங்கம் விலை குறையும் என்பதால் விற்பனை அதிகரிக்கும் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் கமாடிட்டிஸ் தலைவர் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரி 5% குறைப்பார்கள் என எதிர்பார்த்தோம் என்றும் 9% குறைத்துள்ளது உண்மையில் நல்ல முடிவு என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஒரு பக்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதுவே இந்தியாவில் குறைய முக்கிய காரணங்கள் ஆகும்.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்: மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) தங்கம் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. 10 கிராம் தங்கம் 24 கேரட் ரூ.72,838ல் இருந்து ரூ.68,500 ஆகக் குறைந்துள்ளது.. அதாவது 24 கேரட் தங்கம் ஒரே நாளில் ரூ.4,000 வரை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 2,397.13 குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். தங்கத்தைப் போலவே சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.88,995ல் இருந்து ரூ.84,275க்கு சரிந்தது.












Click it and Unblock the Notifications