தங்கம் விலை மீண்டு எகிறியது ஏன்? வரும் நாட்களில் விலை ஏறுமா? குறையுமா? நகை வணிகர் சங்கம் பதில்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிந்து வந்த நிலையில் இன்று திடீரென ஒரே அடியாக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் ரூ.2,320 அதிகரித்த நிலையில் வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், பிரபல வணிகருமான ஜெயந்திலால் சலானி தங்கம் விலை உயருமா அல்லது குறையுமா என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.
தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவாக உச்சம் தொட்டு இருந்தது. அதன்பிறகு சரிய தொடங்கியது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து சரியத் தொடங்கிய தங்கம் விலை கடந்த மாதம் 4 ஆம் தேதி வரை குறைந்தபடியே இருந்தது.

தங்கம் விலை
ஆனால் கடந்த மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் உயர்ந்து வேகம் காட்டியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் தங்கம் விலை அதிகரித்தப்படியே இருந்தது. தொடர்ச்சியாக உயர்ந்த தங்கம் விலை மீண்டும் கடந்த மாத இறுதியில் குறையத் தொடங்கியது. இம்மாத தொடக்கத்திலும் குறைந்தபடியே இருந்தது. நேற்றும் தங்கம் விலை சரமாரியாக குறைந்து இருந்தது.
தங்கம் விலை ஏறுமா? குறையுமா?
இதனால் இனியும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தங்கம் விலை இன்று மீண்டும் சரமாரியாக உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கு விற்பனை ஆகின்றது. இதனால் மீண்டும் தங்கம் விலை குறையுமா இல்லை அதிகரிக்குமா என நகை பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். இம்மாதத்தில் சுபமுகூர்த்த தினங்கள், அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதாலும் தங்கம் விலை அடுத்தடுத்த நாட்களில் என்னவாகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த சூழலில் தங்கம் விலை வரும் நாட்களில் ஏறுமா? அல்லது குறையுமா? என்பது தொடர்பாக சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், பிரபல வணிகருமான ஜெயந்திலால் சலானி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-தங்கம் விலை குறைந்ததற்கு முதலில் என்ன காரணம் என்ன என்றால், அமெரிக்கா ஈரான் மீது பல அழுத்தங்களை கொடுத்தது. ஹார்முஸ் ஜலசந்தி எங்களுக்கு சொந்தமானது என அமெரிக்கா சொல்வதும், இனிமேல் இது டிரம்ப் ஜலசந்தி என்று சொல்லி வருவதும், அதில் கடந்து செல்பவர்கள் எங்களுக்கே பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறது.
மீண்டும் உயரத் தான் செய்யும்
ஈரான் அமெரிக்கா தொடர் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. இதன் காரணமாக தங்கம் மீது முதலீடு செய்து வந்தவர்கள் கச்சா எண்ணெய் உள்ளிட்டவை மீது முதலீடு செய்யத் தொடங்கினர். இது தான் தங்கம் விலை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. கடந்த ஒரு காலமாகவே தங்கம் விலை சரிந்து வந்தது. இப்போது என்னவென்றால், முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடுகளை குவித்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையிலேயே தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.
இதன் விளைவு இன்று தங்கம் விலையானது உயர ஆரம்பித்து இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் தங்கம் விலை மீண்டும் மீண்டும் உயரத் தான் செய்யும். தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்படி திடீரென தங்கம் விலை வீழ்ச்சி அடையும் போது வாங்கலாம். வரும் அக்டோபர் மாதம் வரை இப்படி ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருக்கலாம். விலை குறையும் நேரத்தில் தங்கம் வாங்கலாம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
