அடுத்த வாரம் தங்கம் விலை ஏறிடுமாம்.. இதுதான் வாங்குவதற்கு ரைட் டைம்.. நகை வியாபாரிகள் நறுக்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் தங்க நகை ஆபரணங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கம் விலை தொடர்ந்து சரியுமா? அல்லது மீண்டும் விலை திடீரென ஏறிவிடுமா? என்ற ஏதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. தங்கம் விலை நிலவரம் குறித்து நகை வியாபாரிகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. வரலாறு காணாத உச்சத்தை தினம் தினம் எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு பவுன் 60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ என மக்கள் பயப்படும் அளவுக்கு ஜெட் வேகத்தில் விலை ஏறிக்கொண்டே சென்றது. குறிப்பாக கடந்த மாதம் 31 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.59,640-ஆக விற்பனையானது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே சென்றதால், இனி தங்கத்தை கனவில் தான் வாங்க முடியுமோ என நடுத்தர மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டது. எனினும், இந்த மாத துவக்கத்தில் இருந்து தங்கம் விலை சற்று குறையத்தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு தங்கம் விலை அதிரடியாக சரிந்தது.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க முயற்சிப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இதனால், சர்வதேச பொருளாதார நெருக்கடி குறையும் என்ற எதிர்பாப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை சரிந்ததாக பொருளாதார நிபுணர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, தங்கம் விலை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலும் இறங்கு முகத்தில் இருந்தது. இடையிடையே விலை உயர்ந்தாலும் தங்கம் விலை இறங்கு முகத்தில் தான் உள்ளது.
கடந்த மாதம் 31 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், விலை குறைந்ததால் கடந்த 7 ஆம் தேதி ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,280 க்கும் மேல் சரிந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் நேற்று முன் தினம் ரூ.57 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருக்கிறது.
நவம்பர் 13 ஆம் தேதியான நேற்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,360 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,045 க்கு விற்பனையானது. தங்கம் விலை இன்று (நவ.14) கிராமுக்கு ரூ.110 குறைந்தது. சவரனுக்கு ரூ. 850 ரூபாய் குறைந்து 55,840க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்தது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து இருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, தங்கம் விலை தொடர்ந்து குறையுமா? இல்லை மீண்டும் சட்டென ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுமா? என நகைபிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:-
"கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகை நாட்கள் வருவதால் மக்கள் தங்க நகை வாங்குவது அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைக்கு பிறகு தங்கம் விலை சிறிதளவு உயர வாய்ப்புள்ளது. ஏனெனில் சர்வதேச முதலீடுகள் அதாவது தொழிற்துறை சார்ந்த பங்குச்சந்தை முதலீடுகள், கிரிப்டோ கரன்சி முதலீடுகள், டாலர் மீதான முதலீடுகள் எல்லாம் மீண்டும் வழக்கமாக மாறக்கூடும். எனவே, நுகர்வோர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை தங்களுக்கு தேவையான அளவுக்கு வாங்கிக் கொள்ள இதுதான் சரியான தருணம்" என்றனர்.












Click it and Unblock the Notifications