"நல்ல லக் தான்.. தங்கம் விலை ரூ.9500 வரை போகலாம்.." ஆனா நொடியே புதிய குண்டை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து புதிய உச்சத்திற்குப் போய் வருகிறது. பொதுமக்களால் வாங்கவே முடியாத விலையை நோக்கி தங்கம் போய்க் கொண்டிருக்கும் சூழலில், கொஞ்சமாவது தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தங்கம் விலை உயரக் காரணத்தை விளக்கிய அவர், அது எந்தளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது என்பது குறித்தும் முக்கிய கருத்துகளைக் கூறி வருகிறார்.
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் வேகமாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை உயர அமெரிக்கப் பொருளாதாரம், டிரம்ப் கொள்கைகள், புவிசார் அரசியல் எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்தளவுக்கு வேகமாகத் தங்கம் விலை உயர்வதால் அதைப் பொதுமக்களால் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனந்த் சீனிவாசன்
ஏற்கனவே ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,000ஐ தாண்டிவிட்ட சூழலில், அதன் பிறகும் கூட தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை மிடில் கிளாஸ் மக்களால் கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை தாறுமாறாக உயர என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது குறையக் கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைக் கூறியிருக்கிறார்.
இனி சரியுமா?
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்த போதிலும், இந்தியாவில் தங்கம் விலை குறையவில்லை. என்ன நடக்கும் என்பது திங்கள்கிழமை தான் தெளிவாகத் தெரியும். வரும் காலங்களில் இன்னும் கூடுதலாக வட்டி குறைப்பு வரும் என அமெரிக்கா சொல்லிவிட்டதால், சர்வதேச சந்தையிலுமே தங்கம் விலை இனி சரியாது என்றே நினைக்கிறேன்.
பல உலக நாடுகள் டாலரில் இருந்து வெளியே சென்று, தங்கத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே தங்கம் விலை பெரியளவில் சரியாமல் இருக்கிறது. எனவே, தங்கம் விலை இன்னும் ஒரு சதவிகிதம் விழுந்தால் கூட அது பெரிய லக் தான்.
ரூ.9500க்கு போகலாம்
மிக மோசமாகப் போனால் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9500 வரை போகலாம் என நினைக்கிறேன். இது எனது தனிப்பட்ட கணிப்பு. ஆனால், ரூ.9500க்கு எல்லாம் போகாது என்றே ஒட்டுமொத்த மார்கெட்டும் சொல்கிறது. குறிப்பாகச் சில வல்லுநர்கள் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் 4000 டாலர் வரை போகலாம் என்கிறார்கள். இதைத் தான் நானும் தங்கம் விலை 15% வரை உயரலாம் என்றேன்.
ஓரிரு நாட்கள் குறைந்தாலும் கூட பிறகு தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இங்கிருந்து 4000 டாலர் என்றால் கிட்டத்தட்ட 10% என அர்த்தம். அப்போது இந்தியாவில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,300ஆக இருக்கும். இப்போதைக்கு டிரெண்டை பார்த்தால் அப்படித் தான் இருக்கிறது. தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது" என்றார்.
என்ன சொல்கிறார்
அதாவது புவிசார் அரசியல் மற்றும் உலக நாடுகளின் நிலைப்பாடு காரணமாகத் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் குறைவாம். அப்படியே குறைந்தாலும் ரூ.9500க்கு கீழ் போகாது என்கிறார். அதேநேரம் தங்கம் விலை இந்த விலையில் இருந்து மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதே அவரது கருத்தாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications