"தங்கம் விலை சுமார் ரூ.7,888.." தாறுமாறாக சரியுதே! இன்னும் எவ்வளவு குறையும்? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை இந்தளவுக்குச் சரிவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். மேலும், இது எவ்வளவு நாள் குறையுமா.. மீண்டும் விலை அதிகரிக்குமா என்பது குறித்தும் முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
கடந்த சில காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இம்மாதத் தொடக்கத்தில் உச்சம் தொட்டது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.9,470க்கு விற்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்தே வருகிறது.

சரியும் தங்கம் விலை
ஆகஸ்ட் 9ம் தேதிக்கு பிறகு நேற்று வரை 9 நாட்களில் தங்கம் விலை 6 நாட்கள் சரிந்துள்ளது. மூன்று நாட்கள் விலை மாற்றமில்லாமல் இருந்தது. ஒரு நாள் கூட விலை அதிகரிக்கவே இல்லை. நேற்று முன்தினம் சனிக்கிழமை தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9275க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்று திங்கள்கிழமையும் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.74,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 9,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்து கல்யாண சீசன் ஆரம்பிக்கவுள்ள நிலையில், தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. இதனால் மக்கள் தங்கம் வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். அதேநேரம் இந்தச் சரிவு எவ்வளவு காலம் குறையும்.. இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் மேலும் தங்கம் விலை குறையுமா என மக்களிடையே பல சந்தேகங்கள் இருக்கிறது.
கிட்டத்தட்ட ரூ.7888
இதற்கான பதிலைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கொடுத்துள்ளார். தங்கம் விலை சரிவுக்கான காரணத்தை விளக்கியுள்ள அவர், அது எந்தளவுக்குத் தொடரும் என்பது குறித்தும் சில கருத்துகளைக் கூறியுள்ளார். தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச மார்கெட்டில் 90 டாலர் வரை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சர்வதேச மார்கெட்டில் அவுன்ஸ் கணக்கில் தங்கம் வர்த்தகமாகும். அதாவது 31.1035 கிராம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.7,888 குறைந்துள்ளது.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் மேலும் கூறுகையில், "தங்கம் விலை (அமெரிக்காவில்) கடந்த ஒரு வாரத்தில் 90 டாலருக்கு மேல் குறைந்துள்ளது. டிரம்ப் தங்கத்திற்கும் வரி போடுவார் என்று நினைத்து உலகெங்கும் வரி எக்குத்தப்பாக எகிறியிருந்தது. ஆனால், இப்போது வரி போட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். இதனால் தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருந்தது. ஆனால், இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை. இப்போது குறைந்தது தங்கம் விலை, மிகச் சீக்கிரம் ஏறிவிடும். ஏனென்றால் இதுவரை இல்லாத வகையில் அமெரிக்கா டாலர் நோட்டுகளை அதிகமாக அச்சடித்து வருகிறார்கள்.
சீக்கிரமே உயரும்
இந்தியாவில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக மட்டுமே சரிகிறது என நினைக்க வேண்டாம். டாலருக்கு நிகர குறையக்கூடாது எனத் தாங்கிப்பிடிக்கிறார்கள். ஆனாலும், அதையும் தாண்டி 3-4% வரை குறைந்துள்ளது. மற்ற கரன்சிகளுக்கு எதிராகவும் ரூபாய் மதிப்பு பயங்கரமாகக் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஒரு யூரோ 100 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது அது 115 ரூபாயாகச் சரிந்துள்ளது. ஸ்விஸ், பிரிட்டன் பவுண்ட் என எல்லா கரன்சிகளுக்கு எதிராகவும் சரிகிறது. ரூபாய் கிட்டத்தட்ட ஆபத்பாந்தவன் போல இருக்கிறது. ரூபாய் சரிந்து தங்கத்தின் விலையைக் காப்பாற்றும்" என்றார்.
அதாவது தங்கம் விலை சரிவது தற்காலிகமானது என்பது ஆனந்த் சீனிவாசன் கருத்து. உலக மார்கெட்டிலும் சரி, இந்திய மார்கெட்டிலும் சரி தங்கம் விலை சீக்கிரமே உயர்ந்துவிடுமாம்.. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தங்கம் விலை வேகமாக உயர இதுவும் காரணமாக இருக்கும் என்றும் தங்கம் விலையில் இந்தச் சரிவு தற்காலிகமானதுதான் என்கிறார் ஆனந்த் சீனிவாசன்!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications