மனைவி அஞ்சலியை முதலில் எங்கு சந்தித்தேன் தெரியுமா? பழைய நினைவுகளில் கூகுள் CEO சுந்தர் பிச்சை
சென்னை: உலகின் மிக பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை இருக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த அவர், ஐஐடி காரக்பூரில் படித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக தனது மனைவி அஞ்சலியை அங்கு தான் சந்தித்தேன் என்றும் கரக்பூர் நாட்களே தன்னை கூகுள் நிறுவனத்தை நோக்கி தள்ளியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி காரக்பூர் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் முன்னாள் மாணவரும் இப்போது கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான சுந்தர் பிச்சை, தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை
ஐஐடி காரக்பூரில் படித்த காலம்தான் தனது வாழ்க்கையை வடிவமைத்ததாகவும், கூகுளை நோக்கிய தனது பயணத்துக்கு அந்த கல்வி நிறுவனம் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். ஐஐடி காரக்பூர் வெளியிட்ட வீடியோ செய்தியில் பேசிய சுந்தர் பிச்சை, கல்லூரி வளாகத்தில் தனக்கு கிடைத்த பல்வேறு அனுபவங்களை நினைவுகூர்ந்தார். ஹாரியின் உணவகம், தனது அறையில் இரவு நேரங்களில் படித்தது, நண்பர்களுடனான நட்பு, பேராசிரியர்கள் என பல நினைவுகளை அவர் பகிர்ந்தார்.
மனைவி அஞ்சலி
குறிப்பாக அவர், "அந்த வளாகத்தில்தான் எனது மனைவி அஞ்சலியை சந்தித்தேன். அங்குதான் முதன்முதலில் புரோகிராமிங் கற்று கொண்டேன். கம்யூட்டரை பயன்படுத்திய முதல் அனுபவங்களும் அங்குதான் கிடைத்தன. பிளாப்பி டிஸ்க்குகளை எல்லாம் ரெடி செய்து எடுத்து சென்றது நினைவிருக்கிறது. இந்த அனுபவங்களே எனது வாழ்க்கைப் பாதையை வடிவமைத்து, கூகுளை நோக்கிய பயணத்துக்கும், தொழில்நுட்பத்தை முடிந்தவரை அதிகமான மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனையை எனக்குள் உருவாக்கியது. ஐஐடி காரக்பூரில் கிடைத்த கல்வி எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு.
அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வளர்ச்சியில் ஐஐடி காரக்பூரின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். இந்தியா உருவாக்கும் புதுமைகள் உலகம் முழுவதற்கும் பயன்படும். புதிய தலைமுறை இந்தியர்கள் நாட்டின் எதிர்காலத்தை புதிதாக கற்பனை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த திறனை மேலும் அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு உதவும். AI அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
ஏஐ டூல்
அடுத்த 5 ஆண்டுகளில் AI என்பது சுகாதார பணியாளர்கள், அரசு அதிகாரிகள், விவசாயிகள், டெவலப்பர்கள் மற்றும் தொழில்முனைவோர் என பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களின் கைகளுக்கு சென்றடையும். நாம் அனைவரும் நமது பணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், அதை மேலும் சிறப்பானதாகவும் மாற்ற AIஐ உருவாக்கி வருகிறோம்.
மேலும், இந்த AI வளர்ச்சியில் மாணவர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஏஐ நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து வந்த பல மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொள்ள வந்தனர். தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற அவர்களின் ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை 2004ல் கூகுள் நிறுவனத்தில் மேனேஜராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் போன்றவற்றை உருவாக்கிய டீம்களில் பணியாற்றினார். குரோம் உலகளவில் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அவருக்கு கூகுளில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகள் வந்தன. ஆண்ட்ராய்டு, கூகுள் மேப்ஸ், மற்றும் ஜிமெயில் போன்ற கூகுளின் முன்னணி டூல்களை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் வந்தது.
அனைத்தையும் வெற்றிகரமாக நடத்தியதால் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019-ஆம் ஆண்டில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும் அவரே தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.


Click it and Unblock the Notifications
