புண்படுத்துவது நோக்கமல்ல.. திமுக எம்எல்ஏ மகன் கிண்டல் வீடியோவை நீக்கிய பரிதாபங்கள் சேனல்
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகனை கிண்டல் செய்த வீடியாவை பரிதாபங்கள் சேனல் நீக்கி உள்ளது. ஆடி மாத பாவங்கள் வீடியோவில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை வீடியோவில் இருந்து நீக்கி உள்ளது. பரிதாபங்கள் டீமிற்கு யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அண்மையில் தமிழக முதல்வரை எலும்பை உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார். இதற்காக அவரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நடந்த போது, அவரது மகன் அக்சய் தவெகவை விமர்சித்தும், கைது நடவடிக்கையை விமர்சித்தும் பேசினார்.

அப்போது அக்சய் பேசுகையில், "மாண்புமிகு முதல்வர் உங்க பையன் தான் உங்க கூட இல்ல. என் அப்பா எனக்காகவும், விளாத்திக்குளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமாக உழைத்து கொண்டிருக்கிறார். அவர் எங்களுடன் இருக்கனும் ஆசைப்படுறோம். இப்படியெல்லாம் பண்ணாதீங்க சார். சட்டமன்றத்துக்குள் எல்லாரையும் அடைச்சு வைக்கனும் என்று இந்த முதல்வர் சொல்றார்.
அப்படியென்றால் அதனை கைப்பற்றி அவர்கள் நினைப்பதை எல்லாம் சட்டமாக இயற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார். தொடர்ந்து ஒரு அவதூறு வழக்கில் எவ்வளவு நேரம் விசாரிக்க முடியும். ஒரு மணி நேரம் விசாரிக்கலாம். பேசுன வீடியோவே ஐந்து நிமிஷம் தான் எனும் போது, 13 மணிநேரம் விசாரித்துள்ளனர். அவர் ஒரு சுகர் பேஷன்ட். இதய பிரச்சனையும் இருக்கிறது. அவரை பயமுறுத்துறாங்க. துப்பாக்கி முனையில் அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதே கருத்தை சொல்ல வேண்டுமென மிரட்டுகிறார்கள்" என்று ஆவேசமாக பேசியிருந்தார் .
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பேசு பொருளானது. கோபி சுதாகரின் பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள் சேனலில் ஆடி மாத பாவங்கள் என்ற வீடியோ அண்மையில் வெளியானது. அந்த வீடியாவில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகன் அக்சய் போன்ற தொணியில் மிமிக்ரி செய்து கோபி பேசுவதாகவும், அப்போது சுதாகர் அந்த இடத்திற்கு வருவதாகவும் வீடியோ இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த திமுகவினர் கடும் கோபம் அடைந்தனர். பரிதாபங்கள் கோபி சுதாகரை விமர்த்து வருகிறார்கள்.
திமுக நிர்வாகிகள் பலர், தந்தையின் நிலையைக் கண்டு கலங்கும் ஒரு சிறுவனின் வேதனையைக் கேலிப்பொருளாக மாற்றுவது நாகரிகமல்ல; பரிதாபங்கள் குழுவின் இந்த செயல் தவறு என்று விமர்சித்து வருகிறார்கள். திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்ட பதிவில், "தன் தந்தைக்கு எதிராக நடந்த சட்டவிரோதமான ஒரு செயலுக்குப் பிறகு, தனது வேதனையை வெளிப்படுத்த முயன்ற ஒரு சிறுவனை இலக்கு வைத்து பரிதாபங்கள்_ வீடியோ வெளியிட்டிருப்பதைப் பார்த்து மிகவும் அருவருப்படைக்கிறேன். திறமையான இந்தத் திறமைசாலிகளுக்கே நான் மிகப்பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்; ஆனால், ஒரு இளம் சிறுவன் தனது வேதனையான காலத்தில் இருக்கும்போது அவனை வைத்துக் கேலி செய்திருப்பதைப் பார்த்து வெறும் அருவருப்பே மிஞ்சுகிறது.சோகமான வீழ்ச்சி... இதை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்." என்று கூறியிருந்தார்.
கடும் எதிர்வினைகளை தொடர்ந்து திமுக எம்எல்ஏ மகனை கிண்டல் செய்த வீடியோ காட்சிகள் பரிதாபங்கள் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பரிதாபங்கள் சேனல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறோம்.
— Parithabangal (@Parithabangal_) July 31, 2026
அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், அது சிலரின் மனதை காயப்படுத்தியிருப்பதால், அந்தக் காட்சிகளை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம்.
பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
