உங்க போனுக்கு RTO சலான் மெசேஜ் வந்திருக்கா? நெல்லை மக்களே உஷார்.. வங்கி பணம் காலி ஆகப்போகுது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து அபராதம் என்ற பெயரில் பரவி வரும் நெல்லை ஆர்.டி.ஓ சலான் மோசடி (Nellai RTO Challan Scam) குறித்து சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகளின் மொபைல் எண்களுக்கு வரும் Parivahan Fake Link அதாவது பரிவாகன் போலி லிங்க் மற்றும் சட்டவிரோத ஏ.பி.கே செயலிகளை டவுன்லோடு செய்வதால் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும் அபாயம் உள்ளதாக நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இதுபோன்ற மெசேஜ்கள் குறித்து சிலர் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது?
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சமீபகாலமாக ஒரு மர்மமான மெசேஜ் செல்போனில் வருகிறதாம்.. அதில், "உங்களது வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், அதற்கான அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

ஆர்டிஓ சலான் மோசடி
இந்த மெசேஜின் கீழே ஒரு வெப்சைட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.. இதனைத் தொட்டால் "RTO Challan" ' என்ற பெயரில் ஒரு செயலி பதிவிறக்கம் ஆகும். இது முற்றிலும் போலியானது என்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதை பற்றி போலீசார் முக்கிய அறிவுறுத்தலை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.. அதில், "இந்த மோசடி செயலியை உங்கள் போனில் நிறுவியவுடன், அது உங்கள் போனில் உள்ள குறுஞ்செய்திகள், வங்கி தொடர்பான தகவல்கள் மற்றும் ஓ.டி.பி எண்களை திருடும் வசதி கொண்டது.
நெல்லை போலீசார் எச்சரிக்கை
நீங்கள் அபராதம் செலுத்துவதாக நினைத்து வங்கி விவரங்களை உள்ளிடும்போது, அந்த தகவல்களைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கையே காலி செய்து விடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு தகவல்கள் தனிப்பட்ட செல்போன் எண்களில் இருந்து வராது,
இதுபோன்ற அறிமுகமில்லாத லிங்குகளை கிளிக் செய்யாமல் இருந்தாலே இந்த மோசடியை எளிதாகத் தவிர்க்க முடியும். அரசு சார்ந்த அபராத தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அரசு தரப்பு போக்குவரத்து அபராதங்கள்
அரசு தரப்பில் போக்குவரத்து அபராதங்களை செலுத்த [சந்தேகத்திற்குரிய இணைப்பு அகற்றப்பட்டது] என்ற ஒரே ஒரு தளம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்த செயலிகளையோ அல்லது வாட்ஸ்அப் வழியாக வரும் லிங்க்குகளையோ நம்பி பணத்தைச் செலுத்த வேண்டாம்.. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் எந்த ஒரு செயலையும் (APK File) போனில் இன்ஸ்டால் செய்யக் கூடாது என்பதையும் மக்கள் கவனிக்க வேண்டும்.
ஒருவேளை யாராவது இது போன்ற மோசடி வலைதளங்களில் சிக்கி பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் மட்டுமே இழந்த பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications