அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காதா? திமுக வழியிலேயே தவெக அரசும்? கடும் எதிர்ப்பு
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே திமுக அரசு கொண்டு வந்த TAPS திட்டத்தை அதாவது (Tamilnadu Assured Pension Scheme) எனும் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை, எதிர்த்து போராடி வரும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், இப்போது தவெக அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. "தேர்தலில் சொன்னபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துங்கள்.. TAPS திட்டத்தை கைவிடுங்கள்" என்பதுதான் அந்த கோரிக்கையாகும்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் TAPS என்ற புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் வந்த நாள் முதலே இதை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் எதிர்த்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்கு பதிலாக TAPS திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

அரசு ஊழியர்கள்
இந்த நிலையில், இப்போதுள்ள தவெக அரசும் TAPS திட்டத்தை செயல்படுத்தப் போவதாக சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.. ஏற்கனவே திமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடரக்கூடாது என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
TAPS திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பல மாதங்கள் ஆனபோதும், அதற்கான முழுமையான வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. இதனால், விதிமுறைகள் வெளியாகும் வரை ஓய்வு பெறுபவர்களுக்கு இடைக்காலமாக பணப்பலன் வழங்க அரசு உத்தரவிட்டது. கடைசியாக பெற்ற மாத சம்பளத்தில் 30 சதவீதத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இடைக்காலப் பணப்பலன்
ஆனால், இந்த இடைக்காலப் பணப்பலனை பெற்ற சில ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பணத்தை மீண்டும் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள அந்த அமைப்பு, ஓய்வு பெற்றவர்களிடம் கொடுத்த பணத்தை மீண்டும் பறிப்பது மனிதநேயமற்ற நடவடிக்கை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
TAPS திட்டத்தில் இன்னொரு முக்கியமான மாற்றமும் இருப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சுட்டிக்காட்டுகிறது... அதாவது பழைய முறையில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு அரசிடமே இருந்தது. ஆனால், TAPS திட்டத்தில் ஓய்வூதியத்தை வழங்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.
பென்ஷன் சிக்கல்
அந்த நிதியில் எதிர்காலத்தில் போதுமான பணம் இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்வியையும் அவர்கள் வேதனையுடன் கேட்கிறார்கள்.. நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் வரக்கூடும் என்பதுதான் அவர்களின் மிகப்பெரிய பயம்.. அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை போல, எதிர்காலத்தில் TAPS ஓய்வூதியர்களும் பாதிக்கப்படக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
அதனால்தான் TAPS திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுபடியும் கொண்டு வர வேண்டும் என்பதில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் உறுதியாக உள்ளது.
தவெக அரசுக்கு கோரிக்கை
தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் மேஜர் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தை விட வரி மற்றும் பிற வருவாயில் பின்தங்கியுள்ள மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால், அந்த மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்...!!


Click it and Unblock the Notifications
