அரசு ஊழியர் பென்ஷனில் நிதியமைச்சர் போட்ட அந்த 1 கண்டிஷன்? அமிர்தகுமார் விடாமல் கேட்ட கேள்வி இதுதான்
சென்னை: மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அமிர்தகுமார், இந்த அறிவிப்பானது பல ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் தலையில் சம்மட்டியால் அடித்தது போன்ற கடுமையான வலியையும் வேதனையையும் தந்துள்ளது என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஊழியர்களுக்கு, நிதியமைச்சரின் இந்த நிபந்தனையுடன் கூடிய பதில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மத்திய அரசு கடன்
மத்திய அரசின் கடன் வாங்கும் வரம்பைச் சுட்டிக்காட்டி ஓய்வூதியத் திட்டத்தைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல என்றும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் மத்திய அரசு கடன்பெற அனுமதி அளித்தால் மட்டுமே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தினை செயல்படுத்த முடியும் என கூறியுள்ளார். இது அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் தலையில் சம்மட்டியால் அடித்தது போல உள்ளது.
ஓய்வூதிய திட்டம்
2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை அமல்படுத்துவது என அறிவித்த பிறகு 23 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத்திட்டம் கானல் நீராகவே காணப்படுகிறது.
முந்தைய அரசு கடந்த ஜனவரி 3ம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தினை அறிவித்தது. இதை செயல்படுத்துவதற்கு ரூ.13 ஆயிரம் கோடியும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.11000 கோடியும் செலவினங்களாக ஏற்படும் எனக்கூறியதோடு, 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையின் போது தெரிவித்தது.
அரசு அலுவலர்கள்
அவ்வாறு ஜனவரி 9ம் தேதி வெளியிடப்பட்ட அரசானையின்படி நிதியும் ஒதுக்கீடு செய்து இருந்தது. இவை ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட ககன்தீப்சிங்பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முடிவின்படி செயல்படுத்துவதாக தெரிவித்திருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தினை பரிசீலித்து மதிப்பீடு செய்யப்படும் எனக்கூறியிருந்ததை ஏற்று தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர்.
புதிய ஆட்சி பதவியேற்றவுடன் முதல்வர் விஜய் கடந்த மே மாதம் 26ம் தேதி சந்தித்தபோது கடந்த 4 மாதங்களாக 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பணிக்கு வந்தவர்கள் ஓய்வு பெறும் ஓய்வூதியம் கிடைக்காமல் அல்லப்பட்டு வருகின்றனர் என்று கூறியபோது விரைவில் இது தொடர்பாக முடிவெடுக்கிறேன் என்றார்
ஓய்வூதியத் திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள்
அதன்படி கடந்த ஜூன் 16ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தற்காலிக ஏற்பாடாக கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10000 இதில் எது அதிகத்தொகையோ அது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதோடு, இது தற்காலிக ஏற்பாடுதான் என்பதோடு, நிரந்தரமான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்தும் வரை இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது.
இப்போது நிதியமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லும்போது ஒன்றிய அரசு கடன் பெற அனுமதி அளித்தால் மட்டுமே இத்திட்டத்தினை செயல்படுத்த முடியும் என ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட குழு அறிக்கை அளித்துள்ளதாக கூறியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி போன்று உள்ளது.
அந்த குழுவின் முழுமையான அறிக்கையினை வெளியிட வேண்டும். 2026-2027ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்திற்காக இந்த ஆண்டு அறிவிக்க வேண்டிய ரூ.11000 கோடியை ஒதுக்கீடு செய்யாதது தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் பணிபுரியும் 624000 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஓய்வூதியப்படிகள், பணிக்கொடை
மேலும் இந்த நிதிநிலை அறிக்கையில் விடுப்பு சரண், ஓய்வூதியப்படிகள், பணிக்கொடை போன்றவற்றிற்காக ஒதுக்கீடு செய்த தொகையில் சுமார் ரூ.3 லட்சம் குறைத்துள்ளது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய ஓய்வுதியத் திட்டம் தான் இதுவரை அறிவிக்கப்படாவிட்டாலும், ஓரளவு பயனளிக்கக்கூடிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாவது நிரந்தரமாக செயல்படுத்தப்படும் என நம்பியவர்களின் எண்ணமும் ஈடேறவில்லை.
22 வருடங்களாக நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையும், இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தையும் ரத்து செய்து விட்டு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு பரிசீலித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
