தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஆளுநர்!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம், நேரடி பணி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20 சதவீதம் நேரடி பணி நியமனம் செய்வதற்கான சட்டம் 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே அரசு பணியில் இருந்து கொண்டே, வேறு அரசு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறாரா? என்பதை ஆராயாமல், தமிழ் வழிக் கல்வி என்பதன் அடிப்படையிலேயே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.
இதனை தடுக்கும் பொருட்டு, ஏற்கனவே அரசுப் பணிகளில் உள்ளவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை பெற தகுதியற்றவர்கள் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆளுநர் ஒப்புதல்
இதனையடுத்து, முழுமையாக தமிழ் வழியில் பயின்று, புதிதாக அரசுப் பணிகளில் சேருவோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில், நேரடி பணி நியமனம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவானது கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
திருத்தப்பட்ட சட்டத்தின் படி, அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்படும் முன்னுரிமை காலிப்பணியிடத்தில் ஒருவர் ஏற்கனவே முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்றிருந்தால், மீண்டும் அதே வகையான முன்னுரிமை காலிப்பணியிடங்களுக்கு போட்டியிட முடியாது.
முன்னுரிமை பெறத் தகுதியுடையவர்கள்
முதல் வகுப்பு முதல் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே. பிற மொழிகளைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் தகுதியற்றவர்கள்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வகுப்பு வரை நேரடியாகச் சேர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து பின்னர் தமிழ்நாட்டில் தொடர்ந்தவர்களும் தகுதியுடையவர்கள். அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்பதோடு, தமிழ்நாட்டின் இரண்டு மொழிக் கொள்கையுடன் இணைந்ததாகக் கருதப்படுகிறது. இனிமேல் புதிய நியமனங்களில் இந்த 20% ஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.


Click it and Unblock the Notifications
