விஜய் அனுப்பிய ரிப்போர்ட்.. இன்னொரு பக்கம் வேறு ரிப்போர்ட்டோடு டெல்லி செல்லும் ஆளுநர்.. பின்னணி!
சென்னை: தமிழக ஆளுநர் அர்லேக்கர் நாளை 13-ந்தேதி டெல்லிக்கு செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் செல்கிறார் அர்லேக்கர் . அமித்ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்தித்து விட்டு, ஜம்மு காஷ்மிருக்கும் செல்கிறார். இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு 15- ந்தேதி சென்னை திரும்புவார் கவர்னர் என்கிறது லோக் பவன் வட்டாரம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த தீபாவளி பண்டிகை அன்று மட்டும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறது. இந்த தொடர் சம்பவங்கள் அரசியல் கட்சிகளை மட்டுமல்ல, பொது மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இது குறித்து மத்திய உள்துறைக்கு ஐ.பி.ரிப்போர்ட் போட்டுள்ளது.

தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய உள்துறை அமைச்சகம்
அந்த அறிக்கையை மையப்படுத்தி தவெக அரசிடம் விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்த பின்னணியில் தான், தமிழக தலைமைச் செயலாளர் சாயகுமார், உள்துறை செயலாளர் கார்த்திக், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், உளவுத்துறை ஐ. ஜி. அஸ்ரா கார்க் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்தார் விஜய்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது
"சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. அதில் எந்த சமரசமும் இல்லை. குடி போதையில் நடந்த விரும்பாத தகாத சம்பவங்கள், திடீர்னு பகையின் காரணமாக உணர்ச்சி வேகத்தில் நடந்தவைகள் தானே தவிர, இவைகள் திட்டமிட்ட கொலைகள் இல்லை "என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் விவரிக்கப்பட்டதன் அடிப்படையில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் ஒரு ரிப்போர்ட் தயாரித்துள்ளனர் அதிகாரிகள். அதனை மத்திய உள்துறைக்கு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.
கவர்னர் அர்லேக்கரிடமும் ஒரு அறிக்கையை
இந்த நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னர் அர்லேக்கரிடமும் ஒரு அறிக்கையை கேட்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதாவது, தமிழக அரசிடம் கேட்கப்பட்டதை போல, விளக்கம் எல்லாம் கேட்காமல் சட்டம் ஒழுங்கு குறித்து சீரியஷாக அறிக்கை கேட்டிருக்கிறது டெல்லி.
அதன்படி முழு ரிப்போர்ட் ஒன்றை தயாரித்துள்ளது லோக் பவன். அந்த அறிக்கையுடன் தான் நாளைக்கு டெல்லிக்கு செல்கிறார் கவர்னர் அர்லேக்கர்.
டெல்லியில் அமித்சாவை சந்திக்கிறார்.
டெல்லியில் அமித்சாவை சந்திக்கிறார். இதற்கிடையே டெல்லிக்கு கவர்னர் அழைக்கப்பட்டதை அறிந்துள்ள முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னரின் யோசனை என்ன? எந்த கோணத்தில் அறிக்கை தயாரித்திருக்கிறார்? என்பதை அறிவதில் ஆர்வம் காட்டி வருகிறார் முதல்வர் விஜய். இது குறித்து உயரதிகாரிகளிடமும் விவாதித்துள்ளாராம் முதல்வர்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
