முதல்வர் நியமிக்கல.. ஆளுநர் நினைத்தால் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய முடியும்.. எச்.ராஜா சொல்றத கேளுங்க
சென்னை: முதல்வர் அளித்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதை அடுத்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு அராசாணை வெளியிட்டது. ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லை என்று திமுக கூறிவரும் நிலையில், எச்.ராஜா ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளார்.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து செல்ல முயன்ற போது அவருக்கு நெஞ்சு வலி எற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றார்.

அதன்படி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்துவது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
முன்னதாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து அவர் வசம் இருந்த துறைகளை அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அளித்த பரிந்துரையில் கூறியிருந்தார். ஆனால், இலாகா மாற்றம் குறித்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகவும் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை ஏற்க முடியாது எனவும் ஆளுநர் கூறியிருந்தார்.
இதையடுத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று கூறியது. அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநருக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும் என திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக எச். ராஜா கூறியதாவது:- ஆர்டிகிள் 164 தெளிவாக சொல்லுது.. அமைச்சர்களை நியமிப்பது முதல்வர் கிடையாது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ஆளுநரால் அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறது.
ஆளுநர் ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உள்ளது. ஆகவே அந்த மாதிரி சட்டம் உள்ள போது, சபாநாயகர் என்பவர் யார்? கட்சி சார்பு இல்லாதவர். அவர் ஒரு ஊழல் அமைச்சருக்காக பேசலாமா? பாஜகவை சீண்ட வேண்டாம் என்று நான் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தலாகவே சொல்கிறேன். சீண்டினால் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டு இருப்பது அதிகம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications