“தமிழ்நாடு அமைதி பூங்கா.. சட்டம் ஒழுங்கில் சிறப்பு!” இதையும் படிக்காத ஆளுநர் ரவி - நீளும் “லிஸ்டு”
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் பல்வேறு வரிகளையும், வார்த்தைகளையும் தவிர்த்தது சர்ச்சையாகி இருக்கிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குவதாகவும் இடம்பெற்ற வரிகளையும் படிக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் ரவி மாநில அரசின் செயல்பாடுகள், திட்டங்கள், வளர்ச்சி, நோக்கம் குறித்து உரையாற்றினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை "தமிழகம்" என உச்சரிக்க வேண்டும் என்று தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் அவருக்கு எதிராக முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறினர்.

அரசின் உரையை மாற்றிய ஆளுநர்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில், அரசு குறிப்பிட்டு இருந்த தகவல்களை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்தாமல் தவிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தமிழ்நாடு என்று சொல்லாமல் திஸ் கவர்மெண்ட் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததாகவும், தமிழ்நாடு திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

பெரியார், அண்ணா வார்த்தை
அதேபோல் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டு இருந்த பெரியார், அண்ணா, கலைஞர், சுயமரியாதை போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் உரைக்கு பிறகு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரையில் இடம்பெற்ற பல வாசகங்களும், வார்த்தைகளும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் கண்டனம்
சபாநாயகர் உரையை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி படிக்காதது தவறு பேரவையிலேயே ஆளுநர் முன்பாகவே தெரிவித்தார். ஆளுநர் ரவி தாமாக முன்வந்து வாசித்த உரையை அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாது என்றும் அரசு கொடுத்த உரையை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

வெளியேறிய ஆளுநர் ரவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததால் தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பே வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு
இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசாமல் தவிர்த்த விசயங்களையும், சுயமாக பேசிய கருத்துக்களையும் பட்டியலிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். இதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டு வருவதால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற குறிப்பையும் ஆளுநர் ரவி வாசிக்காமல் விட்டுள்ளார்.

இதெல்லாம் தவறவிட்ட வார்த்தைகள்
குறிப்பாக சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது." என்பதையும் ஆளுநர் வாசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications